மும்பை : விளையாட்டு உலகில் வீரர்கள் அணியும் ஜெர்சி எப்போதுமே முக்கியத்துவத்தை பெறுகிறது. கிரிக்கெட், கால்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகளில் வீரர்கள் ஜெர்சியில் இடம்பெற்றிருக்கும் நம்பர் வரலாற்றில் முக்கியத்துவம் பெறும்.
உதாரணத்திற்கு கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் நம்பர் 10 என்று ஜெர்சியை அணிந்துதான் விளையாடுவார். சச்சின் டெண்டுல்கர் சென்ற பிறகு அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக அந்த நம்பர் யாருக்கும் வழங்கப்பட மாட்டாது என பிசிசிஐ அறிவித்திருந்தது.

அந்த அளவிற்கு நம்பர் 10 ஜெர்சி இன்றும் கிரிக்கெட்டில் அழியாத இடத்தை பிடித்திருக்கிறது. நம்பர் 10 ஜெர்சி ஒவ்வொரு கால்பந்து அணியிலும் இடம்பெற்ற ஸ்டார் வீரர்களுக்கு வழங்கப்படும். இதேபோன்று மகேந்திர சிங் தோனி தன்னுடைய ஜெர்சியின் 7வது நம்பரை பயன்படுத்தி வருகிறார். இதனால் 7 என்ற நம்பரும் தோனி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
தோனியை போல் கால்பந்து உலகின் மன்னனாக அறியப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோ 7 என்ற ஜெர்சியை தான் அணிந்திருப்பார். ஒரு சிலர் மூடநம்பிக்கைக்காக தங்களுக்கு இந்த நம்பர் தான் வேண்டும் என்று கேட்டு வாங்குவார்கள். இதனால் ஷேவாக் எனக்கு எந்த நம்பருமே ஜெர்சியில் வேண்டாம் என்று கூறி விட்டு விளையாடி இருக்கிறார்.
அப்படி இருக்க தோனி ஏன் நம்பர் 7-ஐ தேர்வு செய்தார் என்று தற்போது பார்க்கலாம். இது குறித்து தோனியே ஒருமுறை விளக்கம் அளித்திருக்கிறார். அதில் நம்பர் 7 தேர்வு செய்ததில் பின்னால் எந்த மூடநம்பிக்கையும் இல்லை. நான் ஜூலை மாதம் 7ம் தேதி பிறந்தேன். பிறந்த தேதியும் 7, மாதமும் 7 என்பதால் ஜெர்சி நம்பர் 7-ஐ தேர்வு செய்தேன். மேலும் 7 என்ற நம்பரை நான் மிகவும் நடுநிலையான எண்ணாக பார்க்கிறேன் என்று தோனி விளக்கம் அளித்து இருக்கிறார்.
தோனியின் பிறந்த ஆண்டு 1981 ஆகும். அதில் உள்ள எட்டையும் ஒன்றையும் கழித்தால் கூட ஏழு தான் வரும். இதனால் தோனியை சுற்றி எப்போதுமே ஏழு இருப்பதால் அவருடைய ஜெர்சி நம்பரும் 7 என்ற வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறது. இந்திய அணியும் சரி சிஎஸ்கே அணியிலும் சரி அவர் ஏழு என்ற ஜெர்ஸியை அணிந்துதான் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெற்ற பிறகு எப்படி நம்பர் 10 என்ற ஜெர்சிக்கும் ஓய்வு வழங்கப்பட்டதோ தோனிக்கும் அதேபோல் நம்பர் 7 ஜெர்சியை பி சி சி ஐ மீண்டும் பயன்படுத்தக்கூடாது என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.