ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்.. மும்பை அணி செய்த பலே நகர்வு.. ஸ்ரேயாஸ் ஐயருக்கு குறி!
மும்பை: ஹர்திக் பாண்டியாவை வாங்குவதற்கு பல்வேறு அணிகளும் முனைப்பு காட்டிய சூழலில், பஞ்சாப் கிங்ஸ் அணியை மும்பை நிர்வாகம் தேர்வு செய்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்கு நிகரான வீரராக மட்டும் இல்லாமல், மும்பை அணி நிர்வாகம் வேறு சில விஷயங்களையும் எதிர்பார்த்திருக்கிறது. அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிகப்பெரிய டிரேட் நிறைவுக்கு வந்துள்ளது. மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணியைச் சேர்ந்த அர்ஷ்தீப் சிங் மற்றும் விஷ்ணு வினோத் ஆகியோர் மும்பை அணிக்கு செல்ல இருக்கின்றனர்.

இந்த டிரேட்டை பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் முன் நின்று முடித்துள்ளார். சிஎஸ்கே, ராஜஸ்தான், கேகேஆர், டெல்லி உள்ளிட்ட அணிகள் ஹர்திக் பாண்டியாவை வாங்க ஆர்வம் காட்டின. அதிலும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை விட்டுக் கொடுக்க ராஜஸ்தான் அணி முன் வந்தது. இருப்பினும் மும்பை அணி நிர்வாகம் பஞ்சாப் கிங்ஸ் ஆஃபரை ஒப்புக் கொண்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மும்பை அணி தங்களின் ஐகானிக் வீரரான ஹர்திக் பாண்டியாவை விட்டுக் கொடுக்கும் போது, தங்கள் அணிக்கு வரும் வீரர் ஒரு ஐகானிக் வீரராக இருக்க வேண்டும் என்று விரும்பி இருக்கிறது. ஜெய்ஸ்வால் ஐகானிக் வீரர் என்றாலும், மும்பை அணிக்கு பேட்டிங்கில் எந்த பிரச்சனையும் இல்லை. சிஎஸ்கே அணியில் சிவம் துபே ஐகானிக் வீரர் என்றாலும், அவருக்கு வயது 33 வயதாகிவிட்டது.
இந்த நிலையில் பஞ்சாப் அணி அர்ஷ்தீப் சிங் மற்றும் விஷ்ணு வினோத் ஆகியோரை ஆஃபர் செய்துள்ளது. அர்ஷ்தீப் சிங் மும்பை அணியில் இணையும் பட்சத்தில், போல்ட்டை கழற்றிவிட முடியும். அதேபோல் ராபின் மின்ஸ் மற்றும் ரிக்கல்டன் ஆகியோருக்கு பதிலாக விஷ்ணு வினோத்தை பிளேயிங் லெவனில் சேர்க்க முடியும்.
அர்ஷ்தீப் சிங்கிற்கு 27 வயது மட்டுமே ஆகிறது. இதன் மூலமாக அடுத்த ஆண்டு அவரை தக்க வைப்பதிலும் சிரமம் இருக்காது. ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரை ஓய்வு பெற வைக்கும் திட்டத்தில் மும்பை அணி உள்ளது. அப்போது பும்ரா, திலக் வர்மா மட்டுமே ரீடெய்ன் செய்யும் வீரர்கள் பட்டியலில் இருப்பார்கள். மும்பை மண்ணில் அர்ஷ்தீப் சிங்கின் ஸ்விங்கும் நன்றாக எடுபடும்.
அவரால் இன்னும் 6 ஆண்டுகளில் உச்சக்கட்ட ஃபார்மில் செயல்பட முடியும் என்பதால், மும்பை அணி அர்ஷ்தீப் சிங்கை டிரேட் செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியா பஞ்சாப் அணிக்கு சென்றால், ஸ்ரேயாஸ் ஐயரை மும்பை அணி தங்கள் பக்கம் இழுக்க முடியும். மும்பையைச் சேர்ந்த வீரர் என்பதால், ஸ்ரேயாஸ் ஐயரை அடுத்த கேப்டனாக்கும் முடிவில் அந்த அணி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications
