இந்திய அணியில் ரோஹித், கோலியை தொடக்கூட முடியாது.. 2 காரணங்களை உடைத்த அஸ்வின். ஆனால் உண்மை என்ன?
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை யாராலும் நீக்க முடியாது என்று கூறி இருக்கிறார் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கு இடம் கிடைக்காது என்றும், இங்கிலாந்து தொடருடன் அவர் ஓய்வு பெறப்போவதாகவும் வதந்திகள் பரவின.
இதற்கு லார்ட்ஸில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் 110 பந்துகளில் 138 ரன்கள் குவித்து ரோஹித் சர்மா தக்க பதிலடி கொடுத்தார். இந்த நிலையில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து அஸ்வின் தனது 'ஆஷ் கி பாத்' என்ற இந்தி யூடியூப் சேனலில் பரபரப்பாக பேசியுள்ளார்.

"ரோஹித் சர்மா, விராட் கோலி விளையாட விரும்பினால், அவர்களது இடத்தை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. அதற்கு முதல் காரணம், அவர்களின் அசாத்தியமான ரன் குவிப்பு. ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் கிட்டத்தட்ட 12,000 ரன்களைக் குவித்துள்ளார். இத்தகைய இமாலய சாதனைகளைப் படைத்த ஒரு வீரரை யாராலும் அணியில் இருந்து நீக்க முடியாது" என்று அஸ்வின் கூறினார்.
"இரண்டாவது காரணம், அவர்கள் பேட்ஸ்மேன்கள். அவர்களுக்குப் பின்னால் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மைதானத்திற்கு ரசிகர்கள் அவர்களைப் பார்க்கவே வருகிறார்கள். அவர்களை நீக்கினால் ரசிகர்கள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துவார்கள். ஆனால், முகமது ஷமி, சிராஜ் அல்லது புவனேஷ்வர் குமார் போன்ற பந்துவீச்சாளர்கள் நீக்கப்பட்டால் 10 பேர், 100 பேர் அல்லது 10,000 பேர் மட்டுமே கேள்வி கேட்பார்கள். அவர்கள் பெரிய அளவில் சத்தமோ, எதிர்ப்போ காட்ட மாட்டார்கள்.
பந்துவீச்சாளர்களுக்காகவும் ரசிகர்கள் இதேபோல் கொந்தளிக்கும் ஒரு நாள் வந்தால், அவர்களையும் அணியில் இருந்து நீக்குவது கடினமாகிவிடும்" என்று அஸ்வின் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஆனால், டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அழுத்தம் காரணமாகவே ஓய்வு பெற்றார்கள் என்ற சர்ச்சை உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் இருவரும் சரியாக ரன் குவிக்கவில்லை என்ற காரணத்தால் ஒதுக்கப்படும் நிலையில் இருந்தனர். அதனால் தான் அவர்களாகவே ஓய்வை அறிவித்தார்கள் எனவும் கூறப்படும் நிலையில் அஸ்வின் அவர்களை யாரும் தொட முடியாது எனக் கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
