எனக்கே ஸ்கெட்சா??.. ஸ்டீவ் ஸ்மித்தை அலறவிட்ட ரோகித் சர்மா.. புஜாரா, கில்லுக்கு பவுலிங் தந்தது ஏன்??
அகமதாபாத்: 4வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர்களை சோதித்து பார்க்கலாம் என நினைத்த ஆஸ்திரேலிய அணிக்கு அவர்களின் பாணியிலேயே ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். அதுவும் அவர்களின் வாயாலயே போட்டியை முடித்துக் கொள்ளலாம் என கூறும் வரை விடவில்லை.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் இன்று முடிவடைந்தது. இதனை 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி வெற்றி கண்டுள்ளது.
அகமதாபாத்தில் பிரமாண்டமாக தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே சாதகமான பிட்ச்சாக இருந்ததால் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 480 ரன்களை குவித்தது.

4வது டெஸ்ட் போட்டி
எங்களுக்கும் ஆட தெரியும் என்பதை போல இந்திய அணி ஒரு படி மேல் சென்று 571 ரன்களை குவித்தது. ஓப்பனிங் வீரர் சுப்மன் கில் 128 ரன்களும், விராட் கோலி 186 ரன்களை விளாசி இந்தியாவின் கம்பேக்கிற்கு உதவினர். இரு அணிகளும் முதல் இன்னிங்ஸை முடிப்பதற்கே 4 நாட்களை எடுத்துக்கொண்டனர். இதனால் கடைசி நாளில் 2 இன்னிங்ஸ் ஆடுவது என்பது சாத்தியமற்ற ஒன்று தான். ஆனால் அவ்வளவு சீக்கிரம் சமன் செய்யவில்லை.

2வது இன்னிங்ஸ்
2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஓப்பனிங் வீரர் டிராவிஸ் ஹெட் 90 ரன்களும், முதல் விக்கெட்டிற்கு வந்த மார்னஸ் லபுசாக்னே 63 ரன்களும் எடுத்து நிலைத்து நின்றுவிட்டனர். பின்னர் வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் தாமாக டிக்ளர் செய்வதாக இல்லை. வெறும் 17 ஓவர்கள் தான் மீதமுள்ளது என்று இருந்த சூழலில் போட்டியில் வெற்றி பெறுவது என்பது நடக்கவே நடக்காத ஒன்று. எனினும் இந்திய பவுலர்கள் பந்துவீசட்டும், நாம் சதமும், அரைசதமும் அடிப்போம் என்ற எண்ணத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் சோதித்து பார்த்தனர்.

ரோகித் சர்மா பதிலடி
இதனை கவனித்த கேப்டன் ரோகித் சர்மா, அவர்களின் பாணியிலேயே பதிலடி தந்தார். இந்திய அணியின் மெயின் பவுலர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, திடீரென வருபவர்களுக்கெல்லாம் ஓவர் தரப்படும் என்பது போல செயல்பட்டார். இதனால் சட்டீஸ்வர் புஜாராவுக்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைத்தது. 100 டெஸ்ட்களில் விளையாடியுள்ள புஜாரா இதுவரை ஒரே ஒரு ஓவர் தான் வீசியுள்ளார். எனவே அவரின் ஆசையை நிறைவேற்றினார்.

சரணடைந்த ஸ்டீவ் ஸ்மித்
இதனை தொடர்ந்து சுப்மன் கில்லும் பந்துவீசினார். விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரும் அடுத்தடுத்து ஓவர் வீசுவதாக இருந்தது. எங்களை வச்சு காமெடி கீமடி பண்ணலையே என்பதை போல ரியாக்ஷன் கொடுத்த ஸ்டீவ் ஸ்மித், இனியும் பேட்டிங் செய்தால் நமக்கு தான் மரியாதை குறைவாக இருக்கும் என நினைத்து, 175/2 ரன்களுக்கு டிக்ளர் செய்வதாக அறிவித்தனர். போட்டியும் 17 ஓவர்களுக்கு முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்டது.


Click it and Unblock the Notifications