ஆத்தாடி.. எம்புட்டு தூரம்.. சிக்ஸ்ன்னா.. இப்படி பெருசா அடிக்கணும்.. வெ.இண்டீஸ் கேப்டன் சாதனை!
டாண்டன் : வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேசம் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் அதிரடியாக ஆடி உலகக்கோப்பை தொடரின் நீளமான சிக்ஸ் அடித்து பட்டையைக் கிளப்பினார்.
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேசம், இரு அணிகளும் நான்கு போட்டிகளில் விளையாடி அதில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று இருந்தன. அதனால், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி செல்லும் வாய்ப்பு இருக்கிறது என நம்பலாம் என்ற நிலை.

வெஸ்ட் இண்டீஸ் அதிரடி
இந்த சூழ்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது. கிறிஸ் கெயில் 13பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். எனினும், அதன் பின் லீவிஸ் 70, ஹோப் 96, பூரன் 25, ஹெட்மயர் 50 ரன்கள் என அணிக்கு பெருமளவில் ரன் சேர்க்க உதவினர்.

ரஸ்ஸல் ஏமாற்றம்
நான்கு விக்கெட்கள் வீழ்ந்த நிலையில், அதிரடி மன்னன் ரஸ்ஸல் அனுப்பி வைக்கப்பட்டார். கடைசி 10 ஓவர்களில் அவர் சிக்ஸ் மழை பொழிவார் என்று எதிர்பார்த்தால், டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். வேறு வழியின்றி கடைசி 10 ஓவர்களில் அதிரடியாக ஆட முடிவு செய்து களமிறங்கினார் கேப்டன் ஜேசன் ஹோல்டர்.

வந்தார் ஜேசன் ஹோல்டர்
தான் சந்தித்த முதல் பந்தை சிக்ஸுக்கு அனுப்பி வியக்க வைத்தார் ஹோல்டர். தொடர்ந்து அதிரடியாக ஆடினார். 15 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார் ஜேசன் ஹோல்டர்.

அதிக தூரம்
முதல் பந்தில் அடித்த சிக்ஸ் தவிர்த்து, அடுத்து 43வது ஓவரில் மற்றொரு சிக்ஸ் அடித்தார். அந்த சிக்ஸ் தான் 2019 உலகக்கோப்பை தொடரின் நீளமான சிக்ஸாக மாறியது. அந்த சிக்ஸ் 105 மீட்டர் தூரம் சென்று சாதனை படைத்தது.

104 மீட்டர் அடித்த வீரர்
அதற்கு சில ஓவர்கள் முன்பு மற்றொரு வெ.இண்டீஸ் வீரர் ஹெட்மயர் 104 மீட்டருக்கு சிக்ஸ் அடித்து சாதனை செய்தார். அதை கேப்டன் ஹோல்டர் முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹெட்மயர் அடித்த சிக்ஸ் மைதானத்தை விட்டே வெளியில் சென்றது.

வெஸ்ட் இண்டீஸ் அபாரம்
வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்களை இழந்தாலும், ஒவ்வொரு வீரரும் அதிரடியாக ஆடவே அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 321 ரன்களை எட்டியது. ஹோல்டர் அதிரடி வீரர் இல்லை என்றாலும் கேப்டன் என்ற முறையில் பொறுப்பை ஏற்றுக் கொண்டு நீளமான சிக்ஸ் அடித்தார்.


Click it and Unblock the Notifications