WI vs SL: லாரா, கெய்ல் மட்டுமே செய்த ரெக்கார்டை செய்த அமீர் ஜாங்கூ.. டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை
நார்த் சவுண்ட்: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அமீர் ஜாங்கூ சாதனை மழை பொழிந்துள்ளார். 149 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பல முக்கிய சாதனைகளை முறியடித்து அவர் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
தனது 2-வது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடும் 28 வயதான இடதுகை பேட்ஸ்மேன் அமீர் ஜாங்கூ, 342 பந்துகளில் தனது முதல் இரட்டைச் சதத்தைப் பதிவு செய்தார்.
இதன் மூலம், இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த பிரையன் லாரா (221, 209 ரன்கள்) மற்றும் கிறிஸ் கெய்ல் (333 ரன்கள்) ஆகியோருக்குப் பின் 3-வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இப்போட்டியில் 233 ரன்கள் குவித்த அமீர் ஜாங்கூ, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஒருவரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற புதிய சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பு 2021-ல் வங்கதேசத்திற்கு எதிராக கைல் மேயர்ஸ் ஆட்டமிழக்காமல் அடித்த 210 ரன்களே அதிகபட்சமாக இருந்தது.
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இரட்டைச் சதம் அடித்த 3-வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையையும் அமீர் ஜாங்கூ பெற்றுள்ளார். இதற்கு முன்பு கைல் மேயர்ஸ் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் மட்டுமே இந்த சாதனையைச் செய்திருந்தனர்.
அமீர் ஜாங்கூ மற்றும் கேப்டன் ரோஸ்டன் சேஸ் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 602 பந்துகளில் 401 ரன்கள் குவித்து வரலாற்று உலக சாதனை படைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 6-வது விக்கெட்டுக்கு 400 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 2016-ல் இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஜோடி 399 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.
இந்த 401 ரன்கள் பார்ட்னர்ஷிப்பானது, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு விக்கெட்டுக்கும் பதிவு செய்யப்பட்ட 2-வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும். மேலும், இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் பதிவு செய்யப்பட்ட 2-வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகவும் இது அமைந்துள்ளது. இந்த அபாரமான ஆட்டத்தின் மூலம் அமீர் ஜாங்கூ கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரை ஆழமாகப் பதிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications

