WI vs ZIM: 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ்.. இந்திய அணிக்கு மறைமுக ஆப்பு
மும்பை: டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில், ஜிம்பாப்வேயை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது. இது இந்திய அணிக்கு மறைமுக ஆப்பாக அமைந்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில்முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள், ஷிம்ரான் ஹெட்மயரின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் வலுவான ஸ்கோரை எட்டியது.
அவர் வெறும் 34 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளை விளாசி 85 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் என்ற பிரம்மாண்ட ஸ்கோரைப் பதிவு செய்தது. இது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அந்த அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹெட்மயர், ரோவ்மன் பவல் உடன் இணைந்து 52 பந்துகளில் 122 ரன்கள் சேர்த்தனர்.

அவர்களைத் தொடர்ந்து, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 31 ரன்களும், ரொமாரியோ ஷெப்பர்ட் 21 ரன்களும் எடுத்து, ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களுக்கு மேலும் அழுத்தத்தை அளித்தனர். பதிலுக்கு களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 17.4 ஓவர்களில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. பிராட் எவன்ஸ் 21 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அதிகபட்ச ஸ்கோரை அடித்தார்.
மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில், பந்துவீச்சில் குடாக்கேஷ் மோட்டி 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், சிஎஙஸகே வீரர் அகேல் ஹொசைன் 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஜிம்பாப்வேயின் பேட்டிங் வரிசையை சரித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிம்ரான் ஹெட்மயர் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
ஆட்ட நாயகன் விருதை ஏற்றுக்கொண்ட ஹெட்மயர், "கடைசி ஆட்டத்தில் நான் சிறப்பாகச் செயல்படவில்லை. கடந்த சில மாதங்களாக நான் மேற்கொண்ட கடின உழைப்பு பலன் தந்துள்ளது. இந்த அழுத்தம் நிறைந்த சூழல்களில் விளையாடிப் பழகிவிட்டேன், அணியின் நம்பிக்கை எனக்கு மேலும் பலம் சேர்க்கிறது" என்று தெரிவித்தார்.
தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சாதனையைப் பற்றி கேட்டபோது, "இது பெரிய விஷயமில்லை. நாங்கள் இன்னும் எதையும் சாதிக்கவில்லை, ஒவ்வொரு போட்டியையும் தனித்தனியாக அணுக விரும்புகிறோம். எனது குடும்பத்தினர் ஆதரவு அளித்து வருகின்றனர், பேட் பேசட்டும் என்று கற்றுக்கொண்டேன்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பிரமாண்ட வெற்றி, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ரன் ரேட்க்கு பெரிதும் உதவியுள்ளது. இதன்மூலம், அவர்கள் சூப்பர் 8 பிரிவின் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளனர். மறுபுறம், ஜிம்பாப்வேயின் நிகர ரன் விகிதம் கணிசமாக சரிந்து, குழுவின் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தற்போது ஏ பிரிவில் தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன் ரேட் அபாரமாக உயர்ந்துள்ளது. இதனால் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்வது கேள்விக்குறியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications