டி20யில் புதிய சாதனைக்கு அருகே ரோஹித்.. இதை மட்டும் செஞ்சா இந்தியா கெத்து காட்டலாம்
சென்னை : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடர் முடிவை எட்ட உள்ளது.
இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றி டி20 தொடருக்குள் நுழைந்தது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்று இந்த தொடரையும் 2-0 என கைப்பற்றி உள்ளது.
கடைசி டி20 போட்டி சென்னையில் நவம்பர் 11 அன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி, தோல்விகளுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லாத நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனைக்கு அருகில் இருப்பதால் அதற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நான்காவது சதம்
இரண்டாவது டி20 போட்டியில் ரோஹித் சர்மா தன் நான்காவது சர்வதேச டி20 போட்டி சதத்தை நிறைவு செய்தார். அதன் மூலம் ஐசிசி சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதம் அடித்தவர் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

இரண்டாம் இடம் பிடித்த ரோஹித்
மேலும், அந்த போட்டியில் 111 ரன்கள் குவித்த ரோஹித் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். மேலும், இந்திய அளவில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார்.

முதல் இடம் பிடிப்பாரா ரோஹித்?
தற்போது டி20 போட்டிகளில் 2,203 ரன்கள் அடித்து அதிக ரன்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள ரோஹித் சர்மா, இன்னும் 69 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் நியூசிலாந்தின் மார்டின் குப்டில்லை முந்தி, முதல் இடத்தை பிடிப்பார்.

இந்தியாவுக்கு பெருமை கிடைக்குமா?
ரோஹித் தற்போது இருக்கும் பார்மில் இந்த சாதனை எல்லாம் ஒரு பெரிய விஷயமா? என பலரும் நினைக்கலாம். ஆனால், இந்தியா பெருமைப்படும் ஒரு நிகழ்வு இதன் மூலம் ஏற்படும். தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். டி20 போட்டிகளில் ரோஹித் அதிக ரன்கள் அடித்து முதல் இடத்தை பிடித்தால், மூன்று வித கிரிக்கெட்டிலும் இந்தியர்கள் முதல் இடத்தில் இருக்கும் அரிய நிகழ்வை நாம் காணலாம். இந்த அரிய சாதனை சென்னையில் நிகழுமா?


Click it and Unblock the Notifications