கொலாலம்பூர்: 2025 அண்டர் 19 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி சாதனை வெற்றியை பெற்று இருக்கிறது. வெறும் 26 பந்துகளில் சேஸிங்கை முடித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய மகளிர் அணி.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இந்த தொடரின் குரூப் சுற்று போட்டியில் மோதின. குரூப் ஏ பிரிவில் இடம் பெற்று இருந்த இந்திய அணியின் முதல் போட்டியும் இதுவே.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 44 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. 13.2 ஓவர்கள் வரை மட்டுமே அந்த அணியால் தாக்குப் பிடிக்க முடிந்தது.
இந்திய அணியில் ஆயுஷி சுக்லா மற்றும் விஜே ஜோஷிதா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். பாருனிகா ஸிசோடியா 3 விக்கெட்களை வீழ்த்தினார். இந்திய அணி மூன்று ரன் அவுட்களையும் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஐந்து பேர் டக் அவுட் ஆனார்கள்.

அடுத்து 45 ரன்கள் என்ற சிறிய இலக்கை நோக்கி இந்திய அணி சேசிங் செய்தது. துவக்க வீராங்கனை கொங்காடி திரிஷா 2 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பின் வந்த ஜி கமலினி 16 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மூன்றாம் வரிசையில் இறங்கிய சனிகா சால்கே 18 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
இந்திய அணி 4.2 ஓவரில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது. 9 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது இந்திய அண்டர் 19 மகளிர் அணி. அதாவது வெறும் 26 பந்துகளில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது.
இந்த அபார வெற்றி மூலம் இந்திய அணிக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்தது. மேலும் நெட் ரன் ரேட் மிகப்பெரிய உச்சத்தை எட்டி இருக்கிறது. 8.646 என்ற நெட் ரன் ரேட்டை இந்திய அணி பெற்று இருக்கிறது.