மகளிர் உலகக்கோப்பை நிறைவு விழா.. ஸ்பெஷல் கான்சர்ட் நடத்தும் பிரபலம்.. எப்போது ஒளிபரப்பு? முழு விவரம்
மும்பை: மகளிர் உலகக்கோப்பை தொடரின் நிறைவு விழாவில் பாட, நடனமாட உள்ள நட்சத்திரங்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் எந்த நேரத்தில் அரங்கேற்றப்படும் என்பதையும், என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது என்பதையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.
மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 3 மணிக்கு தொடங்க உள்ளது. இந்திய அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி களமிறங்க உள்ளது. இரு அணிகளுமே இதுவரை ஒருமுறை கூட உலகக்கோப்பையை வென்றதில்லை. இத்னால் இன்றைய ஆட்டத்தின் முடிவில் புதிய அணி உலக சாம்பியனாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக இரு அணிகளின் வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் இளம் வீராங்கனை ஜெமீமா ரோட்ரிக்ஸ் அபாரமாக விளையாடி சதம் விளாசியது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இதனால் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை இந்திய ஆடவர் அணி சொந்த மண்ணில் வென்றதை போல், இந்திய மகளிர் அணி வெல்லும் என்று நம்பப்படுகிறது.
இதனிடையே இறுதிப்போட்டியின் போது நிறைவு விழாவுக்கும் ஐசிசி ஏற்பாடு செய்துள்ளது. நவி மும்பையில் நடக்கும் இறுதிப்போட்டியின் நிறைவு விழாவில் சுனிதி செளஹான் பாடல் பாடி நடனமாட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் நிகழ்ச்சி முதல் பேட்டிங் முடிவடைந்து மாலை 6.30 மணியளவில் சுமார் அரை மணி நேரம் வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் லேசர் ஷோ மற்றும் டிரோன் டிஸ்ப்ளே நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட உள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்திய தேசிய கீதத்தை சுனிதி செளஹானும், தென்னாப்பிரிக்கா தேசிய கீதத்தை டரீன் பேங்க் என்பவரும் பாட உள்ளனர். தமிழ்நாட்டில் எப்படி ஜோனிதா காந்தியை இளைஞர்கள் பட்டாளம் கொண்டாடி வருகிறதோ, அதேபோல் வட இந்தியாவில் சுனிதி செளஹானை இளைஞர்கள் பின்பற்றி வருகின்றனர்.
இதனால் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பட்டாசான நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் முன்னணி பாலிவுட் நடிகைகளின் நடனம் அரங்கேற்றப்படும். ஆனால் மகளிர் உலகக்கோப்பை தொடரில் ஒரு கான்சர்ட்டை போன்ற நிகழ்ச்சியை செய்ய ஐசிசி திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications