For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"மரண பயத்தை" காட்டிட்டாங்களே பரமா... கஷ்டப்பட்டு வெஸ்ட் இண்டீஸை வென்ற இந்தியா!

By Mathi

பெர்த்: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக இந்தியா கடுமையாகப் போராடி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியுள்ளது. முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 44.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி பெரும் போராட்டம் நடத்தி 39.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை எட்டியது. இன்றையப் போட்டியில் இந்திய அணி வென்றதன் மூலம் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

World Cup 2015: India hope to continue winning run against West Indies

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் உள்ளன.

டோணி தலைமையிலான இந்திய அணி விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளை கைப்பற்றி உள்ளது. பாகிஸ்தானை 76 ரன் வித்தியாசத்திலும், தென்ஆப்பிரிக்காவை 130 ரன் வித்தியாசத்திலும், ஐக்கிய அரபு எமிரேட்சை 9 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா தோற்கடித்தது. இந்திய அணி இன்றைய 4-வது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மித்தும் கிறிஸ் கெய்லும் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சும் பீல்டுங்கும் படுநேர்த்தியாக அபாரமாக இருந்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களால் ரன்களை எடுக்க முடியாமல் பரிதவித்து வந்தனர். 4.5வது ஓவரில் அந்த அணி 8 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி வீசிய பந்தில் டோணியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ஸ்மித்.

அவர் 20 பந்துகளை எதிர்கொண்டு 6 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது. இதில் ஒரு பவுண்டரி அடக்கம். பின்னர் கெய்லுடன் சாமுவேல்ஸ் கை கோர்த்தார். இந்த இருவரும்தான் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி சாதனை படைத்தவர்கள். ஆனால் இந்த ஜோடியை நிலைக்கவிடவில்லை இந்திய வீரர்கள். 7.2வது ஓவரில் சாமுவேல்ஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

அப்போது அந்த அணி 15 ரன்களைத்தான் எடுத்தது. அடுத்ததாக மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கெய்ல் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்தில் மொகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். அப்போது 8.6ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் என்ற பரிதாப நிலையில் இருந்தது மேற்கிந்திய தீவுகள்.

அந்த அணியை பாடாய் படுத்தும் வகையில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி நடையைக் கட்டினார் ரம்டின். 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 35 ரன்கள் என மிக மோசமான நிலையில் இருந்தது அந்த அணி. பின்னர் ஆடிய சிமன்ஸ் 9 ரன்கள், சமி 26 ரன்கள் ரசல் 8 ரன்கள் என சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழ்ந்தனர்.

ஒரு கட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 100 ரன்களைத் தாண்டுமா? 150 ரன்களைத் தாண்டுமா? என்ற பட்டிமன்றமே நடக்கும் அளவுக்கும் போனது. மேற்கிந்திய தீவுகள் அணியிலேயே ஹோல்டர் ஒருவர்தான் மிக அதிகபட்சமாக 64 பந்துகளை எதிர்கொண்டு 57 ரன்களை எடுத்திருந்தார்.

அவரால்தான் 182 ரன்கள் என்ற கவுரமான ஸ்கோரை அந்த அணி எடுக்கவும் முடிந்தது. 44.2வது ஓவரில் ஜடேஜா பந்தில் கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து கடைசி விக்கெட்டாக ஹோல்டர் வெளியேறினார். 44.2 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 182 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் தொடக்கத்தில் பந்து வீசிய முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ரன்கள் எடுக்க முடியாதபடி பந்துவீசிய கையோடு விக்கெட்டுகளையும் எடுப்பதில் கவனமாக இருந்தனர். 8 ஓவர்களை வீசிய ஷமி 35 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார். இதில் 2 மெய்டன் ஓவர்கள் அடங்கும்.

இதேபோல் உமேஷ் யாதவ் 10 ஓவர்கள் வீசி 42 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜடேஜாவும் 8.2 ஓவர்கள் வீசி 27 ரன்களே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஸ்வின், மொகித் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்திய அணி வெல்ல 183 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது மேற்கிந்திய தீவுகள் அணி.

தடுமாற்றம்.. போராட்டம்.. டென்ஷன் சேஸிங்..

பின்னர் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் தவானும் களமிறங்கினர். இந்தியாவுக்கு183 ரன்கள் எளிதான இலக்குதான்.. ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணியும் விடாக் கண்டன் கொடாக் கண்டனாக பந்து வீசத் தொடங்கியது. இதனால் இந்திய அணி தொடக்கம் முதலே தடுமாறியது.

4.1வது ஓவரிலேயே 11 ரன்கள் எடுத்த நிலையில் தவான் விக்கெட்டை பறிகொடுத்தது இந்தியா. அதேபோல் 20 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் சர்மாவும் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இந்தியா ஒவ்வொரு ரன்னுக்குமே போராட வேண்டிய நிலையில் இருந்தது.

விறுவிறுவென விளையாடிக் கொண்டிருந்த கோஹ்லி அரைசதத்தை தொட்டுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 14.6 ஓவர்களில் 33 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 63 ரன்களையே எடுத்திருந்தது. களத்தில் ரகானேவும் ரெய்னாவும் இருந்தனர். ஆனால் ரகானே இந்திய அணியின் ஸ்கோர் 78 ஆக இருந்த போது அவுட் ஆனார்.

ரெய்னாவுடன் டோணி கை கோர்க்க இந்திய அணி ஒவ்வொரு ரன்னாக சேர்த்துக் கொண்டு 100 ரன்களைத் தாண்டியது. 22.5வது ஓவரில் 107 ரன்களை இந்திய அணி எட்டிய நிலையில் 5வது விக்கெட்டாக ரெய்னா அவுட் ஆனார். அவர் 25 பந்துகளில் 22 ரன்களை எடுத்திருந்தார். டோணியுடன் இணைந்த ஜடேஜாவும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 23 பந்துகளில் 13 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்திருந்தது.

டோணியுடன் அஸ்வின் கை கோர்த்து தொடர்ந்து நிதானமாகவே ரன்களை சேர்த்து ஒருவழியாக 39.1 வது ஓவரில் 185 ரன்களை எட்ட இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் டோணி ஒரு சிக்சர் அடித்தார். கோஹ்லி அதிகபட்சமாக 5 பவுண்டரிகள், டோணி 3 பவுண்டரிகள் எடுத்தனர். அந்த அளவுக்கு மேற்கிந்திய தீவுகளுடன் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டு சிங்கிள், டபுள் என போராடி போராடி ரன்களை எடுக்க வேண்டியதாயிற்று இந்தியாவுக்கு.

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்த ஆட்டத்தில்தான் இந்திய அணி 183 ரன்களை எட்டுவதற்கு இவ்வளவு பகீரத பிரயத்தனப் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் டெய்லர், ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இன்றைய போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

முகம்மது ஷமி ஆட்ட நாயகன்:

மேற்கு இந்தியத் தீவுகளின் பேட்டிங்கின்போது சிறப்பாக பந்து வீசி முக்கிய விக்கெட்களை வீழ்த்தி அவர்களது ரன் குவிப்பை தடுத்து நிறுத்திய முகம்மது ஷமி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Story first published: Friday, March 6, 2015, 20:35 [IST]
Other articles published on Mar 6, 2015
English summary
On a roll with a hat-trick of victories under their belt, a rampaging India will look to continue their winning run against an inconsistent but dangerous West Indies in their fourth group league encounter of the ICC Cricket World Cup on Friday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+