இவ்வளவு ஒய்டு போடக்கூடாது.. எங்க தோல்விக்கு அதுதான் காரணம்.. பதிரானாவை சூசகமாக திட்டிய ஷனகா!
ஐதராபாத்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வீரர்கள் அதிகளவிலான ஒய்டு பால்களை வீசியதும் ஒரு காரணம் என்று இலங்கை அணி கேப்டன் ஷனகா தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் 8வது முறையாக பாகிஸ்தான் அணியிடம் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது. ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி குசல் மெண்டிஸ் மற்றும் சமரவிக்ரமா ஆகியோரின் அபார சதத்தால் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 344 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 37 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன்பின் அப்துல்லா சஃபிக் மற்றும் முகமது ரிஸ்வானின் அபார சதத்தால் 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 345 ரன்களை குவித்து பாகிஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய முகமது ரிஸ்வான் 131 ரன்களை விளாசி ஆட்டநாயகன் விருதை வென்றார். அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரிலேயே அதிக ரன்களை சேஸ் செய்து பாகிஸ்தான் அணி பிரம்மாண்ட சாதனையையும் படைத்தது. இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த போட்டியில் இலங்கை அணியின் இளம் வீரர் பதிரானா 9 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தி 9 ஒய்டுகள் உட்பட 90 ரன்களை விட்டுக் கொடுத்தார். இந்த போட்டி மட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் பதிரானா 5 ஒய்டுகளை வீசியதோடு 95 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதேபோல் நேற்றைய ஆட்டத்தில் மட்டும் இலங்கை அணியினர் 25 ரன்களை ஒய்டு, நோ-பால்களிலேயே விட்டுக் கொடுத்துள்ளனர். இது அந்த அணிக்கு பின்னடைவாக மாறியுள்ளது.

இதுகுறித்து இலங்கை அணி கேப்டன் ஷனகா பேசுகையில், மெண்டிஸ் மற்றும் சமரவிக்ரமா ஆடிய ஆட்டத்திற்கு நாங்கள் கூடுதலாக 25 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் கடைசி நேரத்தில் பாகிஸ்தான் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். நல்ல ஸ்லோயர் பால்களை வீசினார்கள். அதேபோல் எங்கள் அணியில் பந்துவீச்சாளர்களிடம் இருந்து நான் அதிகம் எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்கு எளிய திட்டங்களை தான் கொடுத்திருந்தோம். அதேபோல் ஒய்டு, நோ-பால்களை கட்டுப்படுத்த வேண்டும். அதிக உபரி ரன்களை கொடுத்திருக்கிறோம் என்று மறைமுகமாக சாடியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications