கொல்கத்தா: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பிறந்தநாளன்று சதம் விளாசிய வீரர்களின் முழு பட்டியலை பார்க்கலாம்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வாழ்த்து கூறிய அனைவருக்கும் ட்ரீட் கொடுக்கும் வகையில் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 49வது சதத்தை விளாசிய சாதனை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் போட்டியில் 119 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார் விராட் கோலி. ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக மாறிய நிலையில், விராட் கோலி கடைசி வரை களத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக நிதான ஆட்டத்தை கையில் எடுத்தார். விராட் கோலியை சுற்றி அனைத்து வீரர்களும் அதிரடியாக விளையாடியதால், இந்திய அணியால் 326 ரன்களை குவிக்க முடிந்துள்ளது.
அதேபோல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பிறந்தநாளன்று சதம் விளாசிய 7வது என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி தனது 21வது பிறந்தநாளன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியுள்ளார். அதேபோல் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது 25வது பிறந்தநாளன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசினார்.
அதேபோல் இலங்கை அணியின் சனத் ஜெயசூர்யா தனது 39வது பிறந்தநாளன்று இந்தியாவுக்கு எதிராகவும், நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் தனது 27வது பிறந்தநாளன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், நியூசிலாந்து அணியின் டாம் லேதம் தனது 30வது பிறந்தநாளன்று நெதர்லாந்து அணிக்கு எதிராகவும் சதம் விளாசி இருக்கின்றனர்.

அதேபோல் நடப்பு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மிட்செல் மார்ஷ் தனது 32வது பிறந்தநாளன்று சதம் விளாசினார். தற்போது விராட் கோலி 35வது பிறந்தநாளன்று தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக சதம் விளாசி இருக்கிறார். பிறந்தநாளன்று சதம் விளாசியதோடு, அந்த சதம் சாதனை சதமாகவும் மாறியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.