
டாஸ் வென்ற மே.இ.தீவுகள்
ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் இன்று காலை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் ஸ்மித் மற்றும் கெய்ல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

டக் அவுட் ஆன ஸ்மித்
ஜிம்பாப்வேயின் தினசி ப்யங்காரா பந்து வீசினார். முதல் ஓவரின் 2வது பந்திலேயே ஸ்மித் டக் அவுட் ஆனார்.

விறுவிறு சதமடித்த கெய்ல்
இதனைத் தொடர்ந்து கெய்லுடன் சாமுவேல்ஸ் களத்தில் இணைந்தார். இருவரும் விக்கெட்டை தக்க வைத்துக் கொண்டு ரன்களை எடுக்கத் தொடங்கினர். 51 பந்துகளில் அரைசதத்தை எட்டிய கிறிஸ் கெய்ல் 105 பந்துகளில் சதத்தையும் எட்டினார்.

அரைசதம் கடந்த சாமுவேல்ஸ்
அதே நேரத்தில் மறுமுனையில் நிதானமாக ஆடிய சாமுவேல்ஸ் 95 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார்.

கெய்ல் காட்டிய சிக்சர் மழை- இரட்டை சதம்
சதத்தைக் கடந்த பின்னர் கிறிஸ் கெய்ல் சிக்சர் மழை பொழியத் தொடங்கினார். 127 பந்துகளில் 151 ரன்களை எட்டிய கெய்ல் கண்ணிமைக்கும் நேரத்தில் அதாவது 138 பந்துகளில் 201 ரன்களைக் குவித்து இரட்டை சதமடித்தார்.

சிக்சர்களும் பவுண்டரிகளுமாக...
கமுன்கோசி வீசிய 44 வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரிகளையும் வில்லியம்ஸின் 45 வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களையும் விளாசினார் கெய்ல்.

சதத்தை எட்டிய சாமுவேல்ஸ்
சாமுவேல்ஸும் தம் பங்குக்கு 143 பந்துகளில் 100 ரன்களை எட்டினார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் பெரும்பாடுபட்டனர்.

கடைசி ஓவர் கடைசி பந்தில் அவுட் ஆன கெய்ல்
கடைசி ஓவர்களில் ஜிம்பாப்வேயின் பந்துகளை சிக்சர்களாகவும் பவுண்டரிகளாகவும் விளாசித் தள்ளியது கெய்ல்- சாமுவேல்ஸ் ஜோடி. கடைசி ஓவரில் ஜிம்பாப்வேயின் சதாரா அடுத்தடுத்து 2 நோ பால் வீச கடைசி 2 பந்துகளை மசகட்சா வீச அழைக்கப்பட்டார். கடைசி ஓவரின் கடைசி பந்தை தூக்கி அடித்த கெய்ல் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

372 ரன்களைக் குவித்தது மே.இ. தீவு
50 ஓவர் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட் இழப்புக்கு 372 ரன்களைக் குவித்து. ஜிம்பாப்வே வெல்ல 373 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய கிறிஸ் கெய்ல் 147 பந்துகளில் 215 ரன்களைக் குவித்து கடைசி பந்தில் அவுட் ஆனார். 156 பந்துகளை எதிர்கொண்ட சாமுவேல்ஸ் 133 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.

16 சிக்சர்கள்..
இன்றைய போட்டியில் கிறிஸ் கெய்ல் மொத்தம் 16 சிக்சர்களையும் 10 பவுண்டரிகளையும் விளாசினார்.

11 பவுண்டரிகள்
சாமுவேல்ஸ் 3 சிக்சர்களையும் 11 பவுண்டரிகளையும் விளாசினார். கிறிஸ் கெய்ல் தனிப்பட்ட முறையில் பல்வேறு உலக சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார்.

அதிக ரன் குவித்த ஜோடி
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்ததும் கிறிஸ்கெய்ல்-சாமுவேல் ஜோடிதான்.

அதிக ரன்கள் கொடுத்த கமுன்கோசி
ஜிம்பாப்வே அணியில் 9 ஓவர்கள் வீசிய ப்யங்காரா 82 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். மசகட்சா 6.2 ஓவர்கள் வீசி 39 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். கமுன்கோசி 3 ஓவர்களே வீசி 37 ரன்களையும் வில்லியம்ஸ் 5 ஓவர்கள்வீசி 48 ரன்களையும் கொடுத்தனர். 10 ஓவர்கள் வீசிய ரசா ஒரு மெயிடென்னுடன் 45 ரன்கள் கொடுத்தார். சிகும்புரா 7 ஓவர்கள் வீசி 44 ரன்களையும் சதாரா 9.4 ஓவர்கள் வீசி 74 ரன்களையும் கொடுத்தனர்.

ஜிம்பாவே தடுமாற்றம்
பின்னர் ஜிம்பாப்வேவின் ரசா மற்றும் சகப்வா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சகப்வா 5 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் 1.4வது ஓவரில் ஹோல்டரின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் ஆனார். அப்போது ஜிம்பாப்வே அணி 11 ரன்களை எடுத்திருந்தது.

அடுத்தடுத்து விக்கெட் வீழ்ச்சி
அதனைத் தொடர்ந்து ரசாவுடன் மசகட்சா இணைந்தார். ஆனால் இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 5வது ஓவரின் கடைசி பந்தில் டெய்லர் வீசிய பந்தில் மசகட்சாவும் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். 5 ஓவர் முடிவில் ஜிம்பாப்வே அணி 2விக்கெட் இழப்புக்கு 26 ரன்களை எடுத்திருந்தது.

8 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புடன் 46 ரன்கள்
8வது ஓவர் முடிவில் ரசாவும் அவுட் ஆனார். 8 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 46 ரன்களை எடுத்தது ஜிம்பாப்வே.

மிரட்டிய டெய்லர்- வில்லியம்ஸ் ஜோடி
இதன் பின்னர் ஜிம்பாப்வேயின் விக்கெட்டுகள் நிலைக்கத் தொடங்கின. டெய்லரும் சீன் வில்லியம்ஸும் நிலைத்து ஆடி அணியின் ரன்களை 100ஐ கடக்க வைத்தனர். ஜிம்பாப்வே 126 ரன்கள் எடுத்த நிலையில் டெய்லர் அவுட் ஆனார்.

சதத்தை நெருங்கிய வில்லியம்ஸ்
அதே நேரத்தில் விறுவிறுவென சதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார் வில்லியம்ஸ். 61 பந்துகளில் 76 ரன்களை எடுத்த நிலையில் வில்லியம்ஸ் அவுட் ஆனார். அப்போது ஜிம்பாப்வே 177 ரன்களை எடுத்திருந்தது.

எர்வினும் சூப்பர்
இதேபோல் 41 பந்துகளில் 52 ரன்களை விளாசி எர்வினும் சூப்பராக விளையாடினார். அவர் வெளியேறும் போது ஜிம்பாப்வே 226 ரன்கள் எடுத்திருந்தது.

ரன்கள் குவித்த பின்வரிசை வீரர்கள்
மட்சிகென்யேரி, சிகும்புரா ஆகியோரும் தங்கள் பங்குக்கு பந்துகளை வீணாக்காமல் அடித்தே விளையாடினர். மட்சிகென்யேரி 23 பந்துகளில் 21, சிகும்புரா 20 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தனர்.

சதாரா
இதேபோல் சதாராவும் 20 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்தார். 44.3 வது ஓவரில் கடைசி விக்கெட்டாக சதாரா வீழ்ந்தார்.

சளைக்காத ஜிம்பாப்வே
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்கிற வகையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்களைக் குவித்தது ஜிம்பாப்வே.

73 ரன்களில் மே.இ. தீவுகள் வெற்றி
இதனால் மேற்கிந்திய தீவுகள் அணியானது 73 ரன்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 3 போட்டிகளை எதிர்கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இது 2வது வெற்றி. 3 போட்டிகளை எதிர்கொண்ட ஜிம்பாப்வேவுக்கு இது 2வது தோல்வி.


Click it and Unblock the Notifications











