ஏழரை மணிக்கு மேட்ச் ஆரம்பிச்சிருந்தா ஜெயிச்சிருப்போமில்ல.. டோணியின் 'அந்த 5' சப்பைகட்டுகள்
மும்பை: இந்தியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற உலக கோப்பை டி20 அரையிறுதியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை தேர்ந்தெடுத்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது.
கடைசி கட்ட ஓவர்களில் டோணி அதிக ரன்களை விளாசாமல், சிங்கிள்களும், இரண்டு ரன்களுமாக ஓடியதால் பேட்டிங் சொர்க்கபுரியான வான்கடே மைதானத்தில், இந்தியா, 200 ரன்களை தாண்டி செல்லும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.

ஐந்து காரணங்கள்
இந்த அதிர்ச்சி தோல்விக்கான காரணத்தை விமர்சகர்கள் கூறுவது ஒருபக்கம் என்றால், களத்திலேயே நின்று கவனித்த கேப்டன் டோணி கூறுவது முக்கியத்துவம் பெறுகிறது. இப்படி டோணி மொத்தம் 5 காரணங்களை அடுக்கியுள்ளார். இதில், அவரது பேட்டிங் திறமை குறித்து வாய் திறக்கவில்லை.

டாஸ்
டோணி கூறியதில் முதல் காரணம், டாசில் தோற்றது. டேரன் சம்மி டாஸ் வெற்றி பெற்றதுமே, டிவி வர்ணனையாளரிடம் பேசிய டோணி, நான் டாஸ் வென்றிருந்தாலும் பவுலிங்கைத்தான் தேர்வு செய்திருப்பேன் என்று கூறியிருந்தார். சேசிங் செய்வதுதான் இந்த மைதானத்தில் வசதி.

ஏழரை மணிக்கு
லீக் ஆட்டங்கள் இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடந்த நிலையில், அரையிறுதி போட்டிகள் 7 மணிக்கே தொடங்கியது. இதையும் தோல்விக்கான ஒரு காரணமாக கூறியுள்ளார் டோணி. அப்போ பகல் 3 மணிக்கெல்லாம் விளையாடுனாங்களே அவங்க என்ன காரணம் சொல்வாங்க என யாரும் எதிர்கேள்வி கேட்டுறாதீங்க.

30 ரன் கம்மி
கூடுதலாக 30 ரன்கள் எடுத்திருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும் என்றும் டோணி கூறியுள்ளார். 2 விக்கெட்டுகளை மட்டுமே இந்தியா இழந்திருந்த நிலையில், பேட்டிங் பிட்ச் மற்றும் சிறு மைதானம் என்பதையெல்லாம் உணர்ந்து ரன் அடித்திருக்க வேண்டியது கடைசியில் களத்தில் நின்ற டோணியின் பணிதான் என்பதை அவரே மறந்துவிட்டார் போலும்.

முந்தி இறங்கி
ரஹானே 35 பந்துகளை விழுங்கித்தான் 40 ரன்கள் எடுத்தார். டோணி 9 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு பவுண்டரியை மட்டுமே டோணியால் அடிக்க முடிந்தது. மனிஷ் பாண்டே, பாண்ட்யா போன்ற அதிரடி வீரர்களை இறக்கிவிடாமல் முந்திக்கொண்டு டோணி களமிறங்கி எதை சாதித்தார் என்பதை அவரே சீர்தூக்கி பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

பங்குனி வெயில் பல்ல காட்டுது
அடுத்ததாக டோணி கூறிய காரணம், இரண்டாவதாக பவுலிங் வீசும் அணியினருக்கு பந்து கிரிப் கிடைக்கவில்லையாம். இதற்கு காரணம், இரவில் பெய்யும் பனி என்கிறார். 7 மணிக்கு போட்டியை ஆரம்பித்தது தோல்விக்கு காரணம் என்று கூறிய டோணிதான், பனியையும் காரணமாக கூறுகிறார். அவர் லாஜிக் படி பார்த்தால், 7.30 மணிக்கு போட்டி ஆரம்பித்தால் 2வது பவுலிங் செய்யும் அணி மிகப்பெரும் 'பனி மூட்டத்தால்' பாதிக்கப்பட்டிருக்குமே?

2 முறை தப்பிய சிம்மன்ஸ்
சிம்மன்ஸ் 18 ரன்கள் எடுத்திருந்தபோதும், 50 ரன்கள் எடுத்திருந்தபோதும், கேட்ச் கொடுத்தார். ஆனால் முறையே, அஸ்வின் மற்றும் பாண்ட்யா நோ-பால் வீசியிருந்ததால் விக்கெட்டும் கிடைக்கவில்லை, ஃப்ரீ ஹிட்டும் வழங்கப்பட்டது. இது கொஞ்சம் நியாயமான காரணம்தான்.


Click it and Unblock the Notifications