இந்தியாவுக்குப் போகாதீர்கள்... பாக். அணிக்கு மாஜி ஐசிசி தலைவர் கோரிக்கை
கராச்சி: இந்தியாவுக்குச் சென்று டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடுவதை பாகிஸ்தான் அணி தவிர்க்க வேண்டும் என்று முன்னாள் ஐசிசி தலைவர் ஈசான் மணி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மார்ச் 19ம் தேதி இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அந்த நாட்டு அரசு அனுமதியும் அளித்து விட்டது.
ஆனால் பாகிஸ்தான் அணிக்கு பாதுகாப்பு தர முடியாது இமாச்சலப் பிரதேச அரசு கூறி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போகாதீங்க
இதுகுறித்து ஈசான் மணி கூறுகையில், இமாச்சலப் பிரதேச அரசு கூறியதை பாகிஸ்தான் அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ரிஸ்க் எடுக்கக் கூடாது
இந்தியாவுடன் விளையாடுவதைக் காட்டிலும் நமது வீரர்கள், அதிகாரிகளினம் பாதுகாப்பும், உயிரும்தான் முக்கியமானது. எனவே பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தரம்சலாவுக்குப் போகக் கூடாது என்று கூறியுள்ளார் ஈசான் மணி.

மனோகர் ஷசாங்
இதற்கிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷஹாரியார் கானுடன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஷசாங் மநோகர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, பாகிஸ்தான் அணிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதியளித்தார்.

வீரபத்ர சிங் அதிரடி
முன்னதாக இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ரசிங் கூறுகையில், இந்தப் போட்டியை தரம்சலாவில் நடத்தக் கூடாது. வேறு இடத்திற்கு மாற்றி நடத்தட்டும். பதன்கோட் விமானப்படைத் தளத்தில் எதிரிகளால் தாக்கப்பட்டு வீரமரணம் அடைந்த நமது வீரர்களுக்கு அதுதான் மரியாதை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு இடத்திற்கு மாற வாய்ப்பு
தரம்சலாவில் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால் மொஹாலி அல்லது கொல்கத்தாவுக்கு இப்போட்டி மாற்றப்படலாம் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications