காயம்.. உலக கோப்பையிலிருந்து வெளியேறினார் யுவராஜ்சிங்.. மனிஷ் பாண்டே அணியில் சேர்ப்பு
மும்பை: காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து இந்திய வீரர் யுவராஜ் சிங் வெளியேறுகிறார். அவருக்கு பதிலாக 15 பேர் கொண்ட இந்திய அணியில் மனிஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நாளை நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் யுவராஜுக்கு பதில் ரஹானே களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடரில் சூப்பர்-10 சுற்றில் ஒரு போட்டியில் தோற்றபோதும், 3 போட்டிகளில் வென்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய அணி.
மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீசை இந்திய அணி எதிர்கொள்கிறது.

யுவராஜ் அவுட்
இந்நிலையில், காயம் காரணமாக, உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து யுவராஜ்சிங் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக 15 பேர்கொண்ட இந்திய அணியில் மனிஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸி.க்கு எதிராக அபாரம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி சூப்பர்-10 போட்டியின்போது, யுவராஜ்சிங்கிற்கு காயம் ஏற்பட்டது. அப்போட்டியில் 21 ரன்கள் எடுத்து கோஹ்லிக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்த யுவராஜ்சிங், ஆஸி. கேப்டன் ஸ்மித் விக்கெட்டை தனது பந்து வீச்சால் வீழ்த்தியிருந்தார்.

மனிஷ் பாண்டே
15 பேர் கொண்ட அணியில் இருந்து யுவராஜை நீக்குவதால் அவருக்கு மாற்றாக மனிஷ் பாண்டேவை சேர்த்துக்கொள்ள ஐசிசி டெக்னிக்கல் கமிட்டியிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி கேட்டிருந்தது. இன்று அனுமதி கிடைத்துள்ளது.

அணியில் ஒரு மாற்றம்
தற்போதுள்ள இந்திய அணி விவரம்: டோணி (கேப்டன்), ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, ரஹானே, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், ஹர்பஜன்சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஆஷிஷ் நெஹ்ரா, பவன் நெகி, முகமது ஷமி.

ரஹானேவுக்கு வாய்ப்பு?
நாளை நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான அரையிறுதி போட்டியின்போது, யுவராஜ்சிங் இடத்தில், ரஹானே களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அல்லது ஆல் ரவுண்டர் தேவை எனில், பவன் நேகிக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.


Click it and Unblock the Notifications