சீருடை வாங்க கூட பணம் தராத மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம்.. அவலத்தை போட்டுடைத்த கேப்டன்
கொல்கத்தா: மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு புது சீருடை வாங்க கூட அணி நிர்வாகம் பணம் தராத நிலையில், நான் கடனுக்கு பணம் கொடுத்து சக வீரர்களுக்கும் சீருடை வாங்கி கொடுத்தேன் என்று கூறியுள்ளார் அந்த அணி கேப்டன் டேரன் சம்மி.
சம்மியின் பேச்சு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தை உசுப்பேற்றி விட்டுள்ளது. இதற்காக தனது கண்டிப்பை தெரிவித்துள்ளது மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம்.
இங்கிலாந்தை வீழ்த்தி டி20 உலக கோப்பையை மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றிய பிறகு நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் டேரன் சம்மி கூறிய சில கருத்துக்கள் அந்த அணியின் பரிதாப நிலையை வெளிக்கொண்டு வருவதாக இருந்தது.

அனுபவம் இல்லாத மேனேஜர்
டேரன் சம்மி கூறியதாவது: எங்கள் அணிக்கு ரவ்லே லீவிஸ் என்பவர் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு எந்த அணியிலும் அவர் மேலாளராக இருந்து அனுபவமே இல்லாதவர். எங்களுக்கு சீருடையோ, சீருடை மீதான பிரிண்டிங்கோ கூட செய்யப்படவில்லை.

கடன் தந்தேன்
நாங்கள் இப்போது அணிந்துள்ள அணிக்கான சீருடை வாங்கி தருவதில் நிர்வாகம் குளறுபடி செய்தது. இதனால் ஒட்டு மொத்த அணி சீருடை வாங்கவும் நான்தான் கடன் கொடுத்து உதவினேன்.

வாழ்த்துகூட சொல்லவில்லை
டி20 உலக கோப்பையை மேற்கிந்திய தீவுகள் வெல்ல வேண்டும் என்று கிரனெடா பிரதமர் கெயித் மிட்சேல் காலையில், வாழ்த்து மெசேஜ் அனுப்பியிருந்தார். அந்த வாழ்த்து செய்தி எங்களுக்கு உத்வேகம் தந்தது. அவருக்கு நன்றி. ஆனால் எங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியம் அதைக்கூட செய்யவில்லை. இவ்வாறு சம்மி விளாசி தள்ளிவிட்டார்.

விசாரணை
இதுகுறித்து டிவிட்டரில் கருத்து கூறியுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரிய தலைவர் வைக்ளிப் தாவே கேமரூன், "கடைசியாக உங்களுக்கான கட்டணத்தை எந்த விமர்சகர் செலுத்தினார்?" என்று கேட்டுள்ளார். மேலும், விரைவிலேயே சம்மியின் பேச்சு பற்றி விசாரணை நடைபெற வாய்ப்புள்ளதாகவும், மேற்கிந்திய தீவுகள் அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications