துபாய்: தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் அமைக்கப்படுவதாக இருந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான செயலகம், மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானில் எந்தப் போட்டியும் நடைபெறாது எனவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான முடிவை சரத்பவாரை தலைவராகக் கொண்ட ஐசிசியின் உலகக் கோப்பை போட்டி ஒருங்கிணைப்புக் குழு எடுத்துள்ளது.
உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும் நாடுகளின் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் ஏற்கனவே நீக்கப்பட்டு விட்டது.
இதுகுறித்து மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த ஐசிசி தலைமை செயல் அதிகாரி ஹாரூன் லோர்காட், 2011ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் தொடக்க விழாவை வங்கதேசம் நடத்தும். வங்கதேசத்தில் உள்ள இரண்டு மைதானங்களில் மொத்தம் எட்டு போட்டிகள் நடைபெறும்.
இந்தியா 29 போட்டிகளை நடத்தும். மொத்தம் எட்டு மைதானங்களில் இவை நடைபெறும்.
இந்தியாவில் ஒரு அரை இறுதிப் போட்டி மற்றும் இறுதிப் போட்டி ஆகியவை நடைபெறும்.
இலங்கை 12 போட்டிகளை நடத்தும். 3 மைதானங்களில் இவை நடைபெறும் என்றார்.
உலகக் கோப்பைப் போட்டியை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகியவை இணைந்து நடத்துவதாக 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தானை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு கமிட்டியும் அமைக்கப்பட்டது. அதற்கான செயலகம் லாகூரில் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் மார்ச் 3ம் தேதி லாகூரில்,இலங்கை வீரர்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொலைவெறியுடன் தாக்கியதைத் தொடர்ந்து உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும் நாடுகள் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டது. இதற்கான முடிவு ஏப்ரல் 17ம் தேதி எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் போட்டிக்கான செயலகம் தற்போது மும்பைக்கு மாற்றப்பட்டு விட்டது.