கிராஸ் ஐலட் (செயின்ட் லூசியா): செயின்ட் லூசியாவில் நேற்று நடந்த தனது முதலாவது உலகக் கோப்பை டுவென்டி 20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் வலிமையான இந்தியாவுக்கு லேசான டென்ஷனைக் கொடுத்து விட்டுத் தான் ஆப்கானிஸ்தான் தோல்வியைத் தழுவியது.
ஆப்கானிஸ்தானை சாதாரண அணியாக நினைக்க விரும்பவில்லை. சீரியஸாகவே ஆடுவோம்- இந்தப் போட்டிக்கு முன்பு கேப்டன் டோணி சொன்ன வார்த்தை இது. அப்படியே நேற்றைய போட்டி மாறிப் போயிருந்தது.
போரால் சின்னாபின்னமான நிலையில் அகதிகள் முகாம்களில் தங்கியிருந்து, அங்கிருந்தபடியே பயிற்சி எடுத்து ஒரு அணியாக உருவாகி கிரிக்கெட் களம் கண்ட 11 வீரர்கள்தான் நேற்று கிரிக்கெட் வல்லரசுகளில் ஒன்றான இந்தியாவை ஆச்சரியப்படுத்தி விட்டனர்.
ஒரு ஸ்டேடியம் கூட இல்லாத நாடு ஆப்கானிஸ்தான். இந்த நிலையில் அணியாக உருவாகி இரண்டே ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் அசத்தல் முத்திரையைப் பதித்துள்ளனர் ஆப்கானிஸ்தான் வீரர்கள்.
நேற்று செயின்ட் லூசியாவில் நடந்த போட்டியில், இந்தியாவிடம் இந்த குட்டி அணி தோல்வியைத் தழுவினால் எதிர்காலத்தில் சிங்கம் போல சீறுவோம் என்பதைக் காட்டி விட்டுச் சென்றுள்ளனர்.
முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி இந்தியப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினாலும் கூட எங்களாலும் ரன் குவிக்க முடியும் என்பதை காட்டியது.
ஒருபக்கம் விக்கெட்கள் சடசடவென விழுந்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர் சிறப்பாக ஆடி 50 ரன்களைக் குவித்தார். அதேபோல நடுக்கள வீரரான அஸ்கர் ஸடனிக்சாய் 30 ரன்களைச் சேர்த்தார்.
இவர்களின் ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணி 100ரன்களைத் தாண்ட முடிந்தது.
ஆல் அவுட் ஆகாமல், 20 ஓவர்கள் வரை தாக்குப் பிடித்து ஆச்சரியப்பட வைத்த்து ஆப்கானிஸ்தான். 8 விக்கெட்களை இழந்து 115 ரன்களை எடுத்தனர் ஆப்கன் வீரர்கள்.
பின்னர் ஆடிய இந்திய அணிக்கு பந்து வீச்சிலும் ஆச்சரியத்தைக் கொடுத்தனர் ஆப்கன் வீரர்கள்.
தொடக்க ஆட்டக்காரர் கம்பீரை 4 ரன்களில் வீழ்த்தினார் தவ்லத். பின்னர் வந்த சுரேஷ் ரெய்னாவை சமியுல்லா வீழ்த்தினார். இருப்பினும் முரளி விஜய் அபாரமாக ஆடி ரன்களைக் குவித்தார்.
சிறப்பாக ஆடிய விஜய் 48 ரன்களைக் குவித்த நிலையில் சிக்சருக்கு அடிக்கப் போய் கேட்ச் ஆகி வீழ்ந்தார்.
யுவராஜ் சிங் தன் பங்குக்கு 23 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் டோணி கடைசி நேரத்தில் களம் இறங்கி இரண்டு சிக்சர்களை அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.
இந்தியாவுக்கு இது எளிதான வெற்றிதான். இருப்பினும் ஆப்கானிஸ்தான் வீரர்களின் நேர்த்தியான ஆட்டம் இந்தியாவை வியப்புக்குள்ளாக்கி விட்டது. இதை கேப்டன் டோணியும் தனது பேட்டியின்போது குறிப்பிடத் தவறவில்லை. அவர்கள் நேர்த்தியாக ஆடுகிறார்கள். எதிர்காலத்தில் மிக வலுவான அணியாக நிச்சயம் ஆப்கானிஸ்தான் மாறும் என்றார் அவர்.
சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்திய ஆசிஷ் நெஹ்ரா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.