பாக்.கை பந்தாடிய கையோடு கெய்ல் புயலைச் சந்திக்கும் இந்தியா... இன்று 2வது மோதல்
டாக்கா: உலகக் கோப்பை டுவென்டி 20 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா, அதே வேகத்துடன் இன்று கெயல் புயலைச் சந்திக்கிறது. இந்தியாவுக்கும், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான மோதல் இன்று மழை மிரட்டலுக்கு மத்தியில் டாக்காவில் நடைபெறவுள்ளது.
இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டியில் கெய்லின் அதிரடியை சமாளித்து இந்தியா அட்டகாசமான வெற்றியை ஈட்டும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.
இன்றைய போட்டியில் மழை குறுக்கீடு இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் ரசிகர்கள் கவலையுடனும் காத்திருக்கின்றனர்.

நடப்புச் சாம்பியன்
நடப்பு டுவென்டி 20 உலகச் சாம்பியானாக மேற்கு இந்திய அணிகள் இந்தத் தொடருக்கு வந்துள்ளது. சாம்பியன் பட்டத்தைத் தக்க வைக்கும் முனைப்புடனும் அது களம் இறங்கியுள்ளது.

2 முறை மோதல்
இந்தியாவும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் உலகக் கோப்பை டுவென்டி 20 தொடரில் இதுவரை 2 முறை மோதியுள்ளன. இதில் மேற்கு இந்தியத் தீவுகள்தான் இரு முறையும் வென்றுள்ளது.

அபாயகரமான கெய்ல்
இப்படி வரலாறு நமக்கு சாதகமானதாக இல்லை. இருந்தபோதும் இந்தியா, நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. கெய்ல்தான் நமக்கு பேராபத்தாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மித்- பிராவோ - சமி
அதேபோல வேயன் ஸ்மித், வேயன் பிராவோ, சமி ஆகியோரும் மிரட்டலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

சுழற்பந்தை நம்பி
அதேசமயம், இந்திய அணி அஸ்வின், அமித் மிஸ்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் சுழற்பந்து வீச்சை வைத்து மேற்கு இந்தியத் தீவுகளை சாய்க்க முயற்சிக்கலாம்.

ரெய்னா விட்ட கிண்டல்
இதற்கிடையே மேற்கு இந்தியத் தீவுகள் வீரர்களுக்கு சிக்ஸ் அடிக்க மட்டும்தான் தெரியும். ஜெயிக்கத் தெரியாது என்று சுரேஷ் ரெய்னா கிண்டலடித்துள்ளார். அவருக்கு மேற்கு இந்தியத் தீவுகளின் சமி பதிலடி கொடுத்துள்ளார்.

முடிஞ்சா நிப்பாட்டிப் பாரு.. சமி சவால்
இதுகுறித்து சமி கூறுகையில், ரெய்னா என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் எங்களுக்கு சிக்ஸ் மட்டும்தான் தெரியும் என்று அவர் நினைத்தால் முடிந்தால் எங்களைத் தடுத்துப் பாருங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டுள்ளார்.
பார்க்கலாம்.. சிக்ஸ் மழை பொழிகிறதா அல்லது இந்தியா அதைத் தடுத்து நிறுத்தி தகதக வெற்றியைப் பறிக்கிறதா என்பதை.


Click it and Unblock the Notifications