மும்பை: 2025 மகளிர் ஐபிஎல் தொடரை மும்பை இந்தியன்ஸ் அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. மூன்றாவது ஆண்டாக நடந்த மகளிர் ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியும் வங்கதேசம் கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
2025 மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக முன்னேறி இருந்தது.

மூன்றாவது முறையாக இதுபோல புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்திருந்தது டெல்லி கேப்பிடல்ஸ். ஆனால், கடந்த இரண்டு முறையை போலவே இந்த முறையும் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை நடந்த மூன்று மகளிர் ஐபிஎல் போட்டிகளில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
இந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் இறுதிப் போட்டியில் 44 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்தார். நாட் ஸ்கிவர்-பிரண்ட் 28 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார்.
கடைசி நேரத்தில் கமாலினி 7 பந்துகளில் 10 ரன்களும், அமன்ஜோத் கவுர் 7 பந்துகளில் 14 ரன்களும், சம்ஸ்கிருதி குப்தா 5 பந்துகளில் 8 ரன்களும் எடுத்தனர். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 150 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி சேஸிங்கில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அது அந்த அணியின் ரன் ரேட்டை வெகுவாக சரிவடையச் செய்தது. டெல்லி அணியின் கேப்டன் மெக் லேனிங் 13 ரன்களும், ஜெஸ் ஜோனாசன் 13 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 30 ரன்களும், அனபெல் சதர்லேண்ட் 2 ரன்களும் எடுத்தனர்.
மேரிசென் காப் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டது போல பேட்டிங்கிலும் அதிரடியாக ஆடி 26 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். எனினும், 83 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி கடைசி ஐந்து ஓவர்களில் 52 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்தது.
ஆனால், மாரிசான் காப் மற்றும் அடுத்து வந்த ஷிகா பாண்டே அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்ததை அடுத்து அந்த அணியின் நம்பிக்கை தகர்ந்தது. கடைசி ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே கையில் இருந்த நிலையில் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
ஆனால், அப்போது அந்த அணியால் ஐந்து ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக மகளிர் ஐபிஎல் கோப்பையை வென்றது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி மூன்று முறையும் இறுதி போட்டிக்கு முன்னேறி அதில் தோல்வி அடைந்து சோகத்தில் ஆழ்ந்தது.