மும்பை: 2025 மகளிர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரன் அவுட் சர்ச்சை வெடித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் ரன் அவுட் விதிக்கு மாறாக இரண்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதனால் மும்பை இந்தியன்ஸ் அணி இந்தப் போட்டியில் கடைசி பந்தில் தோல்வியடைந்தது. அதை சுட்டிக்காட்டி முன்னாள் வீரர்களும் விமர்சகர்களும் அம்பயர்களை விமர்சித்து வருகின்றனர்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20வது ஓவரில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்தது. அப்போது ராதா யாதவ் மற்றும் நிகி பிரசாத் பேட்டிங் செய்தனர். நிகி பிரசாத் ஐந்தாவது பந்தில் ஆட்டம் இழந்தார்.

அப்போது கடைசி ஒரு பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது. அப்போது சஜனா வீசிய பந்தை அருந்ததி ரெட்டி அடித்து விட்டு இரண்டு ரன் ஓடினார். அவர் இரண்டாவது ரன் ஓடி வரும் போது, சரியாக கிரீஸை எட்டும் போது, மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பந்தை ஃபீல்டிங் செய்து விக்கெட் கீப்பர் இடம் வீசினார்.
விக்கெட் கீப்பர் அருந்ததி ரெட்டி கிரீஸை எட்டு முன் பெயில்ஸை தகர்த்து விட்டார். அருந்ததி ரெட்டியின் பேட் கிரீஸின் முனையில் படும்போது பெயில்ஸில் மின் விளக்குகள் எரிந்தன. சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் விதிப்படி மின்விளக்குகள் பொருத்தப்பட்ட பெயில்ஸ் பயன்படுத்தப்படும் போது, அதில் எரியும் விளக்கை வைத்து ரன் அவுட்டை தீர்மானிக்கலாம் என்ற விதி உள்ளது.
ஆனால் அம்பயர் அதை கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக பெயில்ஸ் முற்றிலுமாக எழும்பி விட்டதா என்பதை அடிப்படையாக வைத்து முடிவு எடுத்தார். அதனால் அருந்ததி ரெட்டி அவுட் இல்லை என அறிவித்தார். இந்த சர்ச்சைக்குரிய முடிவால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியினரும் அந்த அணியின் ரசிகர்களும் அதிருப்தி அடைந்தனர். போட்டியில் இதே போல மேலும் ஒரு ரன் அவுட்டை மும்பை இந்தியன்ஸ் அணி இழந்தது. அதனால் முன்னாள் வீரர்களும் விமர்சகர்களும் அம்பயர்களை விமர்சித்து உள்ளனர்.
இந்த சர்ச்சை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்பயர்களின் இந்த தவறான முடிவு மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.