வதோதரா: 2026 மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள பிசிஏ மைதானத்தில் இன்று (பிப்ரவரி 5, வியாழக்கிழமை) இரவு 7:30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.
லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, விளையாடிய 8 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பெற்றுப் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. இதன் மூலம் அந்த அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. ஏற்கனவே 2024ஆம் ஆண்டு கோப்பையை வென்றுள்ள பெங்களூரு அணி, ஸ்மிருதி மந்தனா தலைமையில் இரண்டாவது முறையாகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது. கிரேஸ் ஹாரிஸ், ரிச்சா கோஷ் போன்ற நட்சத்திர வீராங்கனைகள் அந்த அணியின் பலமாக உள்ளனர்.

மறுபுறம், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் கோப்பையை வெல்ல முடியாமல் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளது. இம்முறை எலிமினேட்டர் சுற்றில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தித் தொடர்ந்து நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, லாரா வோல்வார்ட் மற்றும் மரிசான் கேப் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். எப்படியாவது இம்முறை கோப்பையை வென்றுவிட வேண்டும் என்ற வெறியுடன் டெல்லி அணி உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று (பிப்ரவரி 5) இரவு 7:30 மணிக்குத் தொடங்குகிறது. முன்னதாக இரவு 7:00 மணிக்கு டாஸ் போடப்படும்.
இந்த இறுதிப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சிகளில் நேரலையாகக் காணலாம். தமிழ் வர்ணனையுடன் பார்க்க விரும்புபவர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் அலைவரிசையில் பார்க்கலாம்.
தொலைக்காட்சி இல்லாதவர்கள், மொபைல் போன் மற்றும் லேப்டாப்பில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்தின் மூலம் போட்டியை நேரலையில் கண்டு ரசிக்கலாம்.
கிரேஸ் ஹாரிஸ், ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஜார்ஜியா வோல், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ராதா யாதவ், நாடின் டி கிளர்க், பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, சாயலி சத்கரே, ஸ்ரேயங்கா பாட்டீல், லாரன் பெல், லின்சி ஸ்மித், தயாளன் ஹேமலதா, பிரத்யூஷா குமார், கௌதமி நாயக், பிரேமா ராவத்.
லிசெல் லீ (விக்கெட் கீப்பர்), ஷஃபாலி வர்மா, லாரா வோல்வார்ட், ஜெமிமா ரோட்ரிக்ஸ் (கேப்டன்), மரிசான் காப், சினெல்லே ஹென்றி, நிகி பிரசாத், ஸ்நே ராணா, மின்னு மணி, ஸ்ரீ சரணி, நந்தினி சர்மா, அலானா கிங், தானியா பாட்டியா, லூசி ஹாமில்டன், பிரகதி சிங், எட்லா ஸ்ருஜனா.