வெலிங்டன்: நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC 2025-27) புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி ஜெட் வேகத்தில் முன்னேற, இந்திய அணி மேலும் ஒரு இடத்தைச் சறுக்கி 6-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் வெஸ்ட் இண்டீஸை திணறடித்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் வெறும் 128 ரன்களுக்குச் சுருண்டது. 56 ரன்கள் என்ற எளிய இலக்கை 1 விக்கெட் இழப்பிற்கு எட்டிய நியூசிலாந்து, தொடரைக் கைப்பற்றியதோடு புள்ளிப்பட்டியலிலும் அதிரடி காட்டியுள்ளது.

இந்தப் போட்டிக்கு முன்பு வரை புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி, இந்த வெற்றியின் மூலம் நேரடியாக 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2021 சாம்பியனான நியூசிலாந்து தற்போது 66.67 வெற்றி சதவீதத்துடன் வலுவான நிலையில் உள்ளது.
நியூசிலாந்தின் இந்தத் திடீர் முன்னேற்றம் இந்திய அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் 0-2 எனத் தொடரை இழந்து 5-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 6-வது இடத்திற்குச் சறுக்கியுள்ளது. இந்தியாவின் வெற்றி சதவீதம் 48.15 ஆக உள்ளது. தொடர்ந்து இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் சென்ற இந்தியா, இம்முறை முதல் இரண்டு இடங்களுக்குள் வருவது மிகவும் கடினமாகி வருகிறது.
ஆஸ்திரேலிய அணி விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 100% வெற்றி சதவீதத்துடன் கம்பீரமாக முதலிடத்தில் நீடிக்கிறது. தென்னாப்பிரிக்கா 75% வெற்றி சதவீதத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் (டிசம்பர் 12 நிலவரப்படி):
Asia Cup U19: என்னையா சீண்டுகிறாய்? நோஸ்-கட் கொடுத்த வைபவ் சூர்யவன்ஷி.. ஆசிய கோப்பையில் வெறியாட்டம்
வெஸ்ட் இண்டீஸ் அணி 7 போட்டிகளில் 6-ல் தோற்றுப் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அடுத்த டெஸ்ட் போட்டியிலும் வென்றால், தென்னாப்பிரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தைப் பிடிக்கவும் வாய்ப்புள்ளது. இது இந்தியாவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.