சொந்த வீடு.. யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஒரே கனவு.. மும்பையில் புதிய வீடுக்கு மாறும் இளம் வீரரின் குடும்பம்!
மும்பை: இந்திய அணிக்காக அறிமுகமான இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், மும்பையில் உள்ள தனது வீட்டை மாற்றியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே இமாலய சதம் விளாசியதோடு, ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றுள்ளார். இதனால் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பக்கம் திரும்பியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்து வந்த பாதையையும் ரசிகர்கள் கண்டறிந்து அவரை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டம் குறித்து அவரது சகோதரர் தேஜஸ்வி பேசுகையில், இதுவரை யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் வாழ்வில் ஒரேயொரு ஆசை தான் இருந்தது. சொந்த வீடு ஒன்றை வாங்க வேண்டும் என்பது தான் அது. நாங்கள் கடந்து வந்த பாதையை பார்க்கும் போது, எங்களுக்கு சொந்த வீடு எவ்வளவு முக்கியமானது என்பது புரியும். அதுவும் மும்பையில் சொந்த வீடு வாங்குவது சாதாரணமானது கிடையாது.
தற்போது நாங்கள் 2 பெட் ரூம் கொண்ட வீட்டில் இருந்து மாற்றமடைந்து, 5 பெட் ரூம் கொண்ட வீட்டிற்கு மாறப் போகிறோம். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய போது கூட, யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிகமாக வீடு மாற்றமடைவது பற்றி தான் கேட்டார். விரைந்து வீட்டினை மாற்ற அறிவுறுத்தியுள்ளார். தற்போது புதிய வீட்டிற்கு மாற்றமடைய தேவையான பொருட்களை வாங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் மும்பையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்னும் சொந்த வீடு வாங்கவில்லை. தற்போது அவரின் குடும்பம் மாற்றமடையும் வீடும் வாடகை வீடு தான். அதுமட்டுமல்லாமல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது புதிய கார் வாங்காமல், பழைய காரினை வாங்கி பயன்படுத்தி வருகிறார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் கிரிக்கெட் வளர்ச்சி மட்டுமல்லாமல், பொருளாதார வளர்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications