IPL 2023 - ஜெய்ஷ்வால் செய்த சாதனை பட்டியல்.. சீக்கிரம் இந்த தங்கத்தை இந்தியாவுக்கு தூக்கிட்டு வாங்க
கொல்கத்தா : வறுமை வாட்டினால் கூட திறமையும் உழைப்பும் இருந்தால் அதனை வென்று விடலாம் என்பதற்கு 21 வயதான ஜெய்ஷ்வால் ஒரு உதாரணமாக திகழ்கிறார். சிறுவயதில் பாணி பூரி விற்று வந்த ஜெய்ஸ்வால் தற்போது இந்திய அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.
ஜெய்ஸ்வால் கடந்த இரு சீசன்களில் தன்னுடைய திறமையை நிரூபித்தாலும், ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு தான் அவர் யார் என்று அனைவருக்கும் தெரிந்தது. இனி கிரிக்கெட்டின் புது அரசன் வந்து விட்டான் என்று ரசிகர்கள் பாராட்டும் அளவுக்கு ஜெய்ஸ்வால் படைத்த சாதனைகளை தற்போது பார்க்கலாம்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வால் 575 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் சராசரியாக ஒரு போட்டியில் 52 ரன்களை அவர் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 167 என்ற அளவில் மிரட்டலாக இருக்கிறது. நடப்பு தொடரில் அதிக ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் ஒட்டுமொத்தமாக இரண்டாவது வீரர் என்ற பெருமையும் ஜெய்ஸ்வால் படைத்திருக்கிறார்.
மேலும் நடப்பு சீசனில் சதம், தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் என இரண்டு சாதனையும் ஜெய்ஸ்வால் படைத்திருக்கிறார். இதேபோன்று நடப்பு ஐபிஎல் சீசனில் நான்கு முறை ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் வீரர் என்ற பெருமையும் படைத்திருக்கிறார். இதை தவிர ஜெய்ஷ்வால் எம் வி பி விருது,ஆட்ட நாயகன் விருது அதிக பவுண்டரிகள் அடித்ததற்கான விருது என ஐந்து விருதுகளை ஒரே ஆட்டத்தில் வென்றிருக்கிறார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இரண்டாவது முறையாக ஜெயஸ்வால் ஐந்து விருதுகளை பெற்றிருக்கிறார். அவர் 13 பந்துகளில் அரை சதம் அடித்தவுடன் மட்டுமல்லாமல் கடைசிவரை நின்று ஆட்டமிழக்காமலும் விரைவாக ராஜஸ்தான் அணிக்கு வெற்றி பெற்று தர வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடியதும் அவருடைய திறமையை பறைசாற்றி இருக்கிறது.
ரஞ்சி கிரிக்கெட்டில் சதம், இரட்டை சதம், இராணி கோப்பையில் சதம் துலிப் கோப்பையில் சதம், விஜய் ஹசாரே தொடரில் சதம், இந்திய ஏ தொடரில் சதம் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையில் சதம் என அனைத்து சாதனைகளையும் 21 வயதில் படைத்திருக்கும் ஜெய்ஸ்வாலை விரைவில் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கனவே இசான் கிஷன், ருதுராஜ் போன்றோர் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் தற்போது அந்த வரிசையில் முதலிடத்தில் போய் ஜெய்ஸ்வால் நின்றுவிட்டார்.


Click it and Unblock the Notifications