கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜெய்ஷ்வால் புதிய சாதனை படைத்துள்ளார். 13 பந்துகளில் அரைசதம் அடித்து , ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கேகேஆர் அணிக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் சென்ற சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணியில் வெங்கடேஷ் ஐய அரைசதம் அடித்தார்.

நிதிஷ் ரானா 22 ரன்கள், குர்பாஷ் 18 ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஷ்வால் மற்றும் பட்லர் களமிறங்கினர்.
முதல் ஓவரை நிதிஷ் ரானா வீசினார். இது அவருடைய வாழ்க்கையில் செய்ய போகும் மிகப் பெரிய தவறு என்று அவருக்கு அப்போது தெரியவில்லை. ஜெய்ஷ்வால், சேவாக் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரை கலந்து செய்த கலவை போல் பவுண்டரிகளை விரட்டினார். முதல் 2 பந்தில் சிக்சர், அடுத்த 2 பந்தில் பவுண்டரி, 5வது பந்தில் டபுள்ஸ் மற்றும் கடைசி பந்தில் பவுண்டரி என முதல் ஓவரில் ராஜஸ்தான் அணியும், ஜெய்ஷ்வாலும 26 ரன்கள் சேர்த்தனர்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஆட்டத்தின் முதல் ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ஜெய்ஷ்வால் பெற்றுள்ளார். அத்துடன் ஜெய்ஷ்வால் நிறுத்தவில்லை. தொடர்ந்து பவுண்டரிகளை அடித்து, மிரள வைத்தார். இதன் மூலம் 13 பந்தில் ஜெய்ஷ்வால் அரைசதம் அடித்தார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 14 பந்தில் அரைசதம் அடித்த ராகுலின் சாதனையை 21 வயதான ஜெய்ஷ்வால் முறியடித்துள்ளார். ஜெய்ஷ்வால், புக் கிரிக்கெட் போல விளையடுவதாக கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்சா போக்லே பாராட்டினார்.