டோமினிக்கா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலே சதம் விளாசி இந்திய வீரர் ஜெய்ஸ்வால் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் போட்டியில் 21 வயதான ஜெய்ஸ்வால் அறிமுகவீரராக களம் இறங்கினார்.
கவாஸ்கர், விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தான் தங்களுடைய முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்கள்.

இதனால் ஜெய்ஸ்வாலும் அந்த ஜாம்பவான்கள் பட்டியலில் இடம் பிடிப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கு தன்னுடைய பேட் மூலமே ஜெய்ஸ்வால் தற்போது பதில் கூறியிருக்கிறார். ஆடுகளம் மிகவும் தோய்வாக இருந்ததால் பேட்டிங் செய்வது கொஞ்சம் கடினமாக தான் இருந்தது. எனினும் ஜெய்ஸ்வால் தன்னுடைய திறமையை பயன்படுத்தி சிறப்பாக பந்துகளை எதிர் கொண்டு ரன்களை சேர்த்தார்.
பொறுமையாக இருக்க வேண்டிய நேரத்தில் பொறுமையாகவும், அடிக்க வேண்டிய பந்தை அடித்தும் ஜெய்ஸ்வால் ஸ்கோரை நகரத்தினார். 104 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்த ஜெய்ஸ்வால், ஏழு பவுண்டரிகளை அப்போது அடித்திருந்தார். தொடர்ந்து நங்கூரம் போட்டு ஜெய்ஸ்வால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு மிகப்பெரிய சோதனையை கொடுத்தார்.
திடீரென்று ரிவர்ஸ் ஸ்விப்,கட் ஷார்ட் என அனைத்து விதமான ஷாட்களையும் ஆடி ஜெய்ஸ்வால் ரன்களை சேர்த்தார். இதன் மூலம் அறிமுகப் போட்டியில் ஜெய்ஸ்வால் 215 பந்துகளை எதிர்கொண்டு தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இதில் 11 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் சதம் அடித்த 17 வது இந்திய வீரர் என்ற பெருமை ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்தது.
இதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் இல் அறிமுக டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் ஜெய்ஸ்வால் பெற்றார் .மேலும் இந்தியாவுக்கு வெளியே அறிமுகப் போட்டியில் சதம் அடித்த 5வது இந்திய வீரர் என்ற ரெக்கார்டும் ஜெய்ஸ்வாலுக்கு சொந்தமானது.
இதேபோன்று அறிமுக போட்டியில் தொடக்க வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசிய மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையும் ஜெய்ஸ்வால் படைத்தார். அசாருதீன், கங்குலி, சேவாக், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, குண்டப்பா விஸ்வநாத், லாலா அமர்நாத், ஷிகர் தவான் போன்ற மிகப்பெரிய வீரர்கள் இடம் பிடித்த பட்டியலில் தற்போது ஜெய்ஸ்வாலும் இணைந்து இருக்கிறார்.