“வெறும் இளம் வீரர்களை மட்டும் வைத்து ஜெயிக்க முடியாது அதனால்..”.. கம்பீருக்கு யுவராஜ் சிங் அட்வைஸ்
லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் ஒருநாள் போட்டி எதிர்காலம் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோருக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.
ரோஹித் மற்றும் கோலியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினர் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று யுவராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "அணியில் யாரை வைத்திருக்க வேண்டும் என்பது நிர்வாகத்தின் முடிவு. ஆனால், வெறும் இளம் வீரர்களை மட்டுமே வைத்துக்கொண்டு உங்களால் ஆட்டத்தை வெல்ல முடியாது. அதேபோல் அனுபவம் வாய்ந்த வீரர்களை மட்டுமே நம்பியிருக்கவும் முடியாது. அனுபவமும், இளமையும் கலந்த ஒரு கலவையே அணிக்கு தேவை" என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், "அடுத்த உலகக் கோப்பைக்கு ரோஹித் மற்றும் விராட் கோலி தேவை என்று நீங்கள் நினைத்தால், அதை இப்போதே அவர்களிடம் கூறி அவர்கள் மனதில் உள்ள சந்தேகங்களை போக்க வேண்டும். உலகக் கோப்பைக்கு நீங்கள் போகிறீர்கள், எதைப்பற்றியும் கவலைப்படாமல் விளையாடுங்கள் என்று அவர்களுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும்.
ஒருவேளை அவர்கள் உங்கள் திட்டத்தில் இல்லை என்றால், அதை நேருக்கு நேர் அவர்களிடம் கூறிவிட வேண்டும். இது கடினமான முடிவு என்றாலும், நேரில் சொன்னால் அவர்களும் அதை புரிந்து மதிப்பார்கள்" என்று கூறினார்.
முன்னதாக 39 வயதான ரோஹித் சர்மாவுக்கு இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் போட்டியே கடைசியாக இருக்கும் என்று வதந்திகள் பரவியதை பிசிசிஐ மறுத்திருந்தது. ரோஹித் சர்மா லார்ட்ஸ் போட்டியில் சதம் அடித்து தன் ஃபார்மை நிரூபித்தார். எனவே, அவர் தொடர்ந்து ஒருநாள் அணியில் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோஹித் மற்றும் கோலி இருவரும் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர்கள் செய்த பங்களிப்பு அளப்பரியது என்றும், அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும் யுவராஜ் சிங் கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications

