மும்பை: இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்து மீண்டும் விளையாட வர வேண்டும் என உருக்கமாக அறிவுறுத்தி இருக்கிறார். அவர்கள்தான் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
இந்திய அணி 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான முதற்கட்ட கிரிக்கெட் தொடரை வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மூலம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், இந்திய அணி அடுத்த இரண்டு ஆண்டு காலமும் இளம் கேப்டன் ஒருவரின் தலைமையில் தான் விளையாட வேண்டும் என தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உறுதியாக இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில்தான், கேப்டனாக இருந்த ரோகித் சர்மா தனது ஓய்வை அறிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் சுமாராக விளையாடி வந்த விராட் கோலியும் தனது ஓய்வை அறிவித்தார். இரண்டு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்தது கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், யோக்ராஜ் சிங் இதனால் இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பு என கூறியிருக்கிறார். இது பற்றி அவர் பேசுகையில், "இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்காக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தங்கள் ஓய்வை கைவிட்டு மீண்டும் விளையாட வர வேண்டும். இது அவர்களைப் பற்றி சிந்திக்கும் நேரம் அல்ல. நாட்டைப் பற்றி, ரசிகர்களைப் பற்றி, இந்த விளையாட்டின் மீது மக்களுக்கு இருக்கும் உணர்வை பற்றி சிந்திக்க வேண்டிய நேரம்.
விராட் கோலி இன்னும் 10 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும். ரோகித்தைப் பொறுத்தவரை, அவர் என்னிடம் வந்தால், அவர் தனது உச்சகட்ட உடற்தகுதியைப் பெற வைக்க முடியும்" என்றார் யோக்ராஜ் சிங்
.
மேலும், 2011 ஆம் ஆண்டு யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், வீரேந்தர் சேவாக் ஆகியோர் எந்த காரணமும் இன்றி அணியில் இருந்து நீக்கப்பட்டார்கள் என்றும், அவர்களுக்கு எந்த தெளிவான காரணமும் சொல்லப்படவில்லை எனவும் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி இருந்தார் யோக்ராஜ் சிங்
"யுவராஜ் சிங் ஓய்வு பெற்றபோது நான் அவரை திட்டினேன். அழுத்தத்திற்காக நீ உன்னை விட்டுக் கொடுக்காதே என்று நான் சொன்னேன். அவர் இப்போதும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். அணியில் வீரர்கள் தங்கள் இடத்துக்காக சண்டை போட வேண்டும். மாறாக வெளியில் இருந்து வரும் அழுத்ததிற்காக சரணடையக் கூடாது. பிசிசிஐ பெற்றோரைப் போல நடந்து கொள்ள வேண்டும். தங்களின் வீரர்களைப் பாதுகாத்து ஆதரிக்க வேண்டும். பொறாமை மற்றும் அரசியலின் மூலம் முடிவுகளை எடுக்கக் கூடாது" என்றும் வலியுறுத்தினார்.
"உடனே விராட் கோலிக்கு தொலைபேசியில் அழைத்து, "நான் செய்த தவறை நீயும் செய்யாதே என்று சொல்" என்று நான் யுவராஜிடம் கூறினேன். நிச்சயமாக இன்னும் சில ஆண்டுகளில் அவர்கள் இதை திரும்பிப் பார்த்து நாம் தவறு செய்து விட்டோம் என்று நினைப்பார்கள். நிச்சயம் ஒரு நாள் வெறுப்பு மேலே வரும். ஆனால், அப்போது சிந்தித்து என்ன பயன்?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் யோக்ராஜ் சிங்.