3வது இடத்தைப் பிடிக்க நடந்த போட்டியில் ஜெர்மனி கடும் போராட்டத்தின் இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கடுமையாக போராடி தோல்வியுற்ற உருகுவே அணிக்கு 4வது இடமே கிடைத்தது.
3வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை ஜெர்மனி வெல்வது இது நான்காவது முறையாகும். ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் ஜெர்மனியும், உருகுவேயும் தலா 2 கோல்களுடன் சம நிலையில் இருந்தன.ஆனால் போட்டி முடிய 8 நிமிடம் இருந்தபோது ஜெர்மனி வீரர் சமி கேதிரா அபாரமான கோலைப் போட்டு அணிக்கு வெற்றித் தேடித் தந்து விட்டார்.
கடந்த முறையும் 3வது இடத்தையே பிடித்தது ஜெர்மனி என்பது நினைவிருக்கலாம்.
இரு அணிகளும் நேற்றைய போட்டியில் மிகக் கடுமையாக மோதின. மாறி மாறி கோல் அடித்ததால் போட்டி இறுதிப் போட்டி போல விறுவிறுப்பாக இருந்தது.
ஆட்டம் தொடங்கிய 19வது நிமிடத்தில் முதல் கோலைப் போட்டார் ஜெர்மனியின் தாமஸ் முல்லர். தொடர்ந்து 28வது நிமிடத்தில் உருகுவேயின் முதல் கோலைப் போட்டார் எடின்சன் கவனி. இதனால் போட்டி சம நிலையை எட்டியது.
இந்த நிலையில், 51வது நிமிடத்தில் டியகோ போர்லான் ஒரு கோல் போடவே உருகுவே முன்னிலை பெற்றது. இதனால் போட்டியில் மேலும் விறுவிறுப்பு கூடியது. ஆனால் 56வது நிமிடத்தில் மார்சல் ஜான்சன் ஒரு கோலடித்து சம நிலையை ஏற்படுத்தினார்.
இதையடுத்து இரு அணிகளும் மேலும் ஒரு கோலடித்து வெற்றியைத் தட்ட கடுமையாக முயன்றன. ஆனால் இதில் உருகுவே தோல்வியுற்றது. ஜெர்மனியின் கேதிரா ஆட்டம் முடிய 8 நிமிடங்கள் இருந்த நிலையில் 82வது நிமிடத்தில் கோலடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3வது இடத்தைப் பிடித்து ஆறுதல் அடைந்தது ஜெர்மனி. உருகுவே நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
நேற்றைய போட்டியின் இறுதியில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஏற்கனவே 5 கோல்களுடன் முன்னணியில் இருந்த ஸ்பெயினின் டேவிட் வில்லாவுடன், உருகுவேன் போர்லான், ஜெர்மனியின் தாமஸ் முல்லர் ஆகியோரும் இணைந்தனர். இவர்களைப் போலவே வெஸ்லி ஸ்னீடரும், மிரஸ்லோவ் குளோஸும் தலா 5 கோல்களுடன் உள்ளனர். இதனால் கோல்டன் பூட் விருதுக்கான போட்டி கடுமையாகியுள்ளது.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]