சொதப்பலோ சொதப்பல்..... தென்கொரியாவிடம் 2-0 என தோல்வி... வெளியேறியது நடப்பு சாம்பியன் ஜெர்மனி!
கஸான்: ஃபிபா உலகக் கோப்பையில் இதுவரை நடந்துள்ள பல அதிர்ச்சிகளில் உச்சகட்டமாக, நடப்பு சாம்பியன் ஜெர்மனி முதல் சுற்றுடன் வெளியேறியது. தென்கொரியவுக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால் நாக் அவுட் சுற்று வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் சொதப்பலாக விளையாடி 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.
ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, பி பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், டி பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
முதல் சுற்று லீக் ஆட்டங்கள் நாளையுடன் முடிகின்றன. எப் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, தென் கொரியாவை சந்தித்தது. மற்றொரு ஆட்டத்தில் மெக்சிகோ, ஸ்வீடன் மோதின.

ஜெர்மனிக்கு ஷாக்
எப் பிரிவில் நடந்த முதல் லீக் ஆட்டத்திலேயே ஜெர்மனிக்கு அதிர்ச்சி கிடைத்தது. மெக்சிகோ 1-0 என ஜெர்மனியை வென்றது. ஸ்வீடன் 1-0 என தென்கொரியாவை வென்றது. பிரிவின் மூன்றாவது ஆட்டத்தில் மெக்சிகோ 2-1 என தென்கொரியாவை வென்றது. ஜெர்மனி 2-1 என ஸ்வீடனை வென்றது.

டாப்பில் மெக்சிகோ
மெக்சிகோ 2 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஜெர்மனி, ஸ்வீடன் தலா 3 புள்ளிகளுடன் உள்ளன. இரண்டு தோல்விகளை சந்தித்த தென் கொரியா பிரிவுச் சுற்றுடன் வெளியேறுகிறது. இந்த நிலையில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேற, தென்கொரியாவை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஜெர்மனி இன்று களமிறங்கியது.

பரிதாப நிலையில் ஜெர்மனி
நடப்பு சாம்பியனான ஜெர்மனி, இதுவரை நான்கு முறை உலகக் கோப்பையை வென்றது. ஐந்தாவது முறையாக உலகக் கோப்பையை வென்று, அதிக முறை வென்ற பிரேசில் சாதனையை சமன் செய்யும் முனைப்புடன் இருந்தது. மேலும் தொடர்ந்து 2வது முறையாக வெல்லும் இலக்குடனும் இருந்தது. ஆனால் கடைசி லீக் ஆட்டத்தில் அதிக கோல்களுடன் வென்றாக வேண்டிய கட்டாய நிலையில் ஜெர்மனி இருந்தது.

வெளியேறியது ஜெர்மனி
எப் பிரிவில் இந்த ஆட்டம் நடந்த அதே நேரத்தில் மெக்சிகோ, ஸ்வீடன் மோதின. அந்த ஆட்டத்தின் முடிவும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் ஜெர்மனி இருந்தது. ஆட்டத்தின் 74 சதவீதம் பந்து ஜெர்மனியிடம் இருந்தது. ஆனால், மிகச் சிறந்த தடுப்பாட்டத்தின் மூலம் கோலடிக்கும் வாய்ப்புகளை தென்கொரியா முறியடித்தது. கடைசியில் ஸ்டாப்பேஜ் நேரத்தில் கிம் யாங்க் குவான், சன் ஹியூங் மின் தொடர்ந்து இரண்டு கோல்களை அடிக்க தென்கொரியா 2-0 என ஜெர்மனியை பேக் செய்தது. இதன் மூலம் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, முதல் சுற்றுடன் வெளியேறுகிறது.


Click it and Unblock the Notifications