FIFA: எகிப்து அணியை தவிக்கவிட்ட பெல்ஜியம்.. சொந்த கோலால் ஆட்டம் 1-1 என ஆட்டம் டிரா
சியாட்டில்: 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் ஜி பிரிவின் லீக் ஆட்டத்தில், எகிப்து அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலாவின் 34வது பிறந்தநாளைக் கெடுக்கும் விதமாக பெல்ஜியம் அணி 1-1 என்ற கணக்கில் போட்டியை டிரா செய்து அதிர்ச்சியளித்தது. அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் பலம் வாய்ந்த பெல்ஜியம் மற்றும் எகிப்து அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே எகிப்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ஆட்டத்தின் முதல் பாதியில், எகிப்தின் இமாம் ஆஷூர் மைதானத்திற்கு வெளியிலிருந்து அடித்த அபாரமான கோல், பெல்ஜியம் கோல்கீப்பர் திபோத் கோர்டுவாவைக் கடந்து வலது மூளையில் தஞ்சம் புகுந்தது. இதனால் எகிப்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. உலகக் கோப்பை வரலாற்றில் எகிப்து அணி முன்னிலை பெறுவது இது 2வது முறையாகும்.

இரண்டாவது பாதியில் பெல்ஜியம் அணி கோல் அடிக்கத் தீவிர முயற்சி மேற்கொண்டது. பெல்ஜியம் வீரர் கெவின் டி புருய்னே வீசிய ஃபிரீ-கிக் பந்து துரதிர்ஷ்டவசமாக கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது. மறுபுறம், எகிப்து கேப்டன் முகமது சாலா அடித்த ஹெட்டர் கோல் வாய்ப்பை கோர்டுவா பாய்ந்து தடுத்துக் காப்பாற்றினார்.
ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் பெல்ஜியம் பயிற்சியாளர் ரூடி கார்சியா, நட்சத்திர ஸ்ட்ரைக்கர் ரொமேலு லுகாகுவை மாற்று வீரராகக் களமிறக்கினார். இது பெல்ஜியம் அணிக்கு உடனடியாகக் கை கொடுத்தது. தாமஸ் முனியர் கொடுத்த கிராஸ் பந்தை லுகாகு கோல் அடிக்க முயன்ற போது, பதற்றமடைந்த எகிப்து டிபெண்டர் முகமது ஹானி பந்தைத் தனது சொந்த கோல் போஸ்ட்டிற்குள் (ஓன் கோல்) தள்ளினார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது.
இறுதிவரை இரு அணிகளும் தலா 1 கோல் அடித்ததால் போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. உலகக் கோப்பையில் தனது முதல் வெற்றிக்காக நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் எகிப்து அணிக்கு இந்த டிரா ஏமாற்றத்தை அளித்துள்ளது. அடுத்த போட்டிகளில் எகிப்து அணி ஈரான் மற்றும் நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.


Click it and Unblock the Notifications
