FIFA WC: விஏஆர் முடிவால் ஈரானுக்கு ஏமாற்றம்.. காயத்துடன் வெளியேறினார் எகிப்து கேப்டன் சாலா
நியூயார்க்: ஃபிஃபா உலகக்கோப்பை 2026 கால்பந்து தொடரின் விறுவிறுப்பான லீக் போட்டியில், ஈரான் மற்றும் எகிப்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் அடிக்கப்பட்ட ஈரானின் கோல், விஏஆர் (VAR) பரிசீலனையில் ஆஃப்சைட் என அறிவிக்கப்பட்டதால் ஈரானின் வெற்றி வாய்ப்பு நூலிழையில் நழுவியது. இந்த டிராவின் மூலம் எகிப்து அணி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது.
லுமென் ஃபீல்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் 5-வது நிமிடத்திலேயே எகிப்தின் மஹ்மூத் சாபர் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். அடுத்த சில நிமிடங்களில் ஈரானுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஈரானின் நட்சத்திர வீரர் மெஹ்தி தரேமி இந்த வாய்ப்பைத் தவறவிட்டார். ஆனால், அடுத்த 135 வினாடிகளில் ஈரானின் ரமின் ரெசாயியன் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார்.

இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாகப் போராடின. ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் மெஹ்தி தரேமி தலையால் முட்டிய பந்து கோல் போஸ்ட்டின் குறுக்கு கம்பியில் பட்டுத் திரும்பியது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90+2 நிமிடத்தில்) ஈரானின் ஷோஜா கலீல்சாதே கோல் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். ஆனால், நடுவர்கள் விஏஆர் தொழில்நுட்பம் மூலம் நீண்ட நேரம் பரிசீலித்து, அது ஆஃப்சைட் என்று கூறி அந்த கோலை ரத்து செய்தனர். இதனால் ஈரானின் நேரடி தகுதி வாய்ப்பு பறிபோனது.
இப்போட்டியின் 60-வது நிமிடத்தில் எகிப்து அணியின் கேப்டன் முகமது சாலாவுக்கு இடது தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு மாற்று வீரர் களம் இறக்கப்பட்டார். காலில் ஐஸ் பேக்குடன் பெஞ்சில் அமர்ந்திருந்த சாலாவின் காயம் எகிப்து அணிக்கு அடுத்த சுற்றுக்கு முன்பாக பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குரூப் ஜி பிரிவில் பெல்ஜியத்தைத் தொடர்ந்து எகிப்து அணி இரண்டாம் இடம் பிடித்து ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 3 புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பிடித்துள்ள ஈரான் அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா என்பது மற்ற பிரிவுகளின் போட்டி முடிவுகளைப் பொறுத்தே அமையும்.


Click it and Unblock the Notifications
