எட்டோ சக்தியை செயலிகழக்கச் செய்த ஹோண்டா- ஜப்பானுக்கு முதல் வெற்றி
புளோம்போன்டெய்ன்: சாமுவேல் எட்டோவின் வியூகத்தைத் தகர்த்து அபாரமாக ஆடிய ஜப்பான் அணி, காமரூன் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அசத்தியது.
வெளிநாட்டு மண்ணில் ஜப்பான் பெறும் முதல் உலகக் கோப்பை கால்பந்து வெற்றி இது என்பதால் ஜப்பான் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
காமரூன் அணி பல ஜாம்பவான்களை கடந்த காலத்தில் வீழ்த்திய அணி என்பதால் இந்தத் தொடரிலும் அது பயமுறுத்தலாம் என நம்பப்படுகிறது. மேலும், அந்த அணியின் இளம் வீரர் எட்டோ, முன்னாள் ஜாம்பவான் ரோஜர் மில்லாவைப் போல மிரட்டுவார் என காமரூன் பயிற்சியாளரும் கூறியிருந்தார்.
ஆனால் நேற்றைய ஆட்டத்தில் ஹோண்டா சக்தி, எட்டோ சக்தியை அடக்கி விட்டது. கெல்சுகே ஹோண்டா 39வது நிமிடத்தில் அபாரமான கோலைப் போட்டார். அதன் பிறகு ஜப்பானியர்கள் தடுப்பாட்டத்திற்குப் போய் விட்டனர்.
2வது பாதி ஆட்டத்தில் காமரூன் மிகவும் தீவிரமாக ஆடியது. இதனால் ஜப்பான் வீரர்கள் திணற நேரிட்டது. இருப்பினும் அதை லாவகமாக சமாளித்து காமரூன் கோல் போட்டு விடாமல் தடுத்து விட்டனர்.
ஞாயிற்றுக்கிழமைதான் தனது 24வது பிறந்த நாளைக் கொண்டாடினார் ஹோண்டா. அவருக்கு நேற்றைய ஆட்டம் தாமதமான பிறந்த நாள் பரிசாக வந்து சேர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications