மும்பை: உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியிர் ஜெர்மனி அணி சாம்பியன் ஆவதற்காக விஸ்கி பாட்டில் ஒன்றை 1994 ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுகளாக தன் தோட்டத்தில் புதைத்து வைத்துக் காத்திருக்கிறார் இந்திய கால்பந்து ரசிகர் ஒருவர்.
கால்பந்து போட்டிக்கு பலவிதமான ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால் இந்த ரசிகரின் தவமோ 20 ஆண்டுகாலமாக தொடர்கிறது. கால்பந்து போட்டி இவரின் மதுப்பழக்கத்தைக் கூட நிறுத்தியுள்ளதாம். அவரது கதை சற்றே சுவாரஸ்யமானதுதான் மேற்கொண்டு படியுங்களேன்.

1994 உலகக்கோப்பை
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வர்த்தகர் புதுல் போரா வயது 53. இவர் கால்பந்து விளையாட்டின் ரசிகர். அதுவும் ஜெர்மனி அணிக்கு வெறியர் என்றே கூறலாம். 1994ஆம் ஆண்டு உலகக் கோப்பையை ஜெர்மனி வெல்லும் என்ற நம்பிக்கையில் உயர்தர ஸ்காட்ச் விஸ்கியை வாங்கினார்.
பாட்டில் புதைப்பு
ஆனால் காலிறுதியில் பல்கேரியாவிடம் ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவ வேதனையடைந்த போரா அந்த பாட்டிலை தன் தோட்டத்தில் புதைத்து வைத்தார்.
20 ஆண்டுகால காத்திருப்பு
"இந்த முறை ஜெர்மனி அணி ஆடும் ஆட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்பாக புதைத்த விஸ்கி பாட்டிலை தோண்டி எடுக்க வைத்துள்ளது, ஆனால் எனது நண்பர்கள் அந்த விஸ்கி பாட்டிலை ஏலம் விடுமாறு கூறி வருகின்றனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
குடிப்பதை நிறுத்தினார்
2002ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ஜெர்மனி தகுதி பெற்றது. ஆனால் அந்த முறை பிரேசிலிடம் தோற்றது ஜெர்மனி. ஜெர்மனியின் இந்தத் தோல்விக்குப் பிறகு தான் குடிப்பதையே நிறுத்தி விட்டதாக அவர் கூறியுள்ளார்.( நல்ல விசயம்தானே !)
வீடு முழுவதும் வீரர்கள்
இந்த முறை ஜெர்மனி கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கையோடு கூறி வருகிறார் இந்த ரசிகர். உள்ளூர் கால்பந்து ரசிகர்கள் அவரது வீட்டில் நடப்பு உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளை ரசித்து வருகின்றனர். அவரின் வீடு கால்பந்து வீரர்களின் போஸ்டர்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.