ஊக்கமருந்து விவகாரம்.. உலகக்கோப்பை வென்ற பிரான்ஸ் வீரர் பால் போக்பாவுக்கு நான்கு ஆண்டுகள் தடை
பாரிஸ் : ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக பிரான்ஸ் மற்றும் யுவென்டஸ் கிளப் அணியின் மிட்பீல்டர் பால் போக்பா கால்பந்து விளையாட்டில் இருந்து நான்கு ஆண்டுகள் தடை செய்யப்பட்டார். இவர் 2018ஆம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பை வென்ற பிரான்ஸ் அணியில் இடம் பெற்ற வீரர் ஆவார்.
கடந்த செப்டம்பரில் இத்தாலியின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு (NADO Italia) தீர்ப்பாயத்தால் போக்பா தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். அப்போது அவர் உடலில் அதிக டெஸ்டோஸ்டிரோன் இருப்பது உறுதி செயப்பட்டு இருந்தது. அவர் தடைசெய்யப்பட்ட பொருளை பயன்படுத்தியது குறித்து விசாரணை தொடங்கிய நிலையில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று யுவென்டஸ் அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் சீரி ஏ தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. அந்தப் போட்டிக்கு பிறகு நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில், பால் போக்பா உடலில் அதிக டெஸ்டோஸ்டிரோன் இருப்பது கண்டறியப்பட்டது. அந்தப் போட்டியில் அவர் விளையாடவே இல்லை. மாற்று வீரராக வெளியே அமர வைக்கப்பட்டு இருந்தார். அப்படி இருந்தும் அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் சிக்கினார்.
போக்பாவின் ஊக்கமருந்து மறு ஆய்வு சோதனை அக்டோபர் மாதம் நடத்தப்பட்டு அதிலும் உறுதி செய்யப்பட்டது. இதற்கு எதிராக இத்தாலியின் ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சியுடன் பேச வேண்டாம் என்று முடிவு செய்த போக்பா, இந்த வழக்கை இத்தாலியின் ஊக்கமருந்து எதிர்ப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
இத்தாலியின் தனியுரிமைச் சட்டங்கள் காரணமாக தண்டனை பகிரங்கப்படுத்தப்படாததால், வழக்கை நேரடியாக அறிந்த ஒருவர், பால் போக்பாவுக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு தடையை உறுதிப்படுத்தினார்.
இது குறித்து பால் போக்பாவின் கிளப் அணியான ஜுவென்டஸ் கருத்து தெரிவிக்கவில்லை. இனி சுவிட்சர்லாந்தை மையமாக கொண்ட விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் போக்பா மேல்முறையீடு செய்யலாம். பால் போக்பா அடுத்த மாதம் 31 வயதை எட்டவுள்ள நிலையில், இந்த தண்டனை போக்பாவின் கால்பந்து வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரக்கூடும்.


Click it and Unblock the Notifications