போர்டோ அலேக்ரே: உலக கோப்பை கால்பந்து தொடரில் அல்ஜீரிய அணிக்கு எதிரான நாக் அவுட் சுற்று ஆட்டத்தில், ஜெர்மனி அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், காலிறுதிச் சுற்றில் ஜெர்மனி அணி, பிரான்சை எதிர்கொள்கிறது.
உலக கோப்பை கால்பந்துப் போட்டியில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரபல அணியான ஜெர்மனியுடன், முதன் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய கத்துக்குட்டி அணி அல்ஜீரியா மோதியது. ஆட்டத்தின் பெரும்பாலான நேரம், பந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஜெர்மனி அணி 16 முறை கோல் அடிக்க முயன்றது. ஆனால் அல்ஜீரிய அணி வீரர்கள் நேர்த்தியான முறையில் தடுப்பாட்டம் ஆடி, ஜெர்மனி வீரர்களின் முயற்சிகளை முறியடித்தனர்.

அல்ஜீரிய அணியின் கோல் கீப்பர் ரயீஸ், சாதுர்யமாக செயல்பட்டு கோல்களைத் தடுத்தார். ஸ்டாப்பேஜ் நேர இறுதி வரை கோல் எதுவும் அடிக்காததால், கூடுதல் நேர ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கடுமையாக போராடினர். 92வது நிமிடத்தில் தாமஸ் முல்லர் அடித்த பந்தை, அருமையாக கோலாகமாற்றினார் முன்கள ஆட்டக்காரர் ஆண்ட்ரே.

ஆட்டம் முடிய சில வினாடிகள் இருக்கும் நிலையில் நடுக்கள ஆட்டக்காரர் மசூத் ஒஸில், அல்ஜீரிய கோல் கீப்பரை ஏமாற்றி கோலடித்தார். ஆனால், சற்று நேரத்தில், அல்ஜீரிய முன்கள ஆட்டக்காரர் ஜாபோவ் கோல் அடிக்க, அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால், மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்காத நிலையில், ஆட்ட நேர இறுதியில் 2-1 என்ற கணக்கில் ஜெர்மனி அணி வெற்றி பெற்றது. அல்ஜீரிய அணி போட்டித்தொடரை விட்டு வெளியேறியது. 4ம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி, பிரான்ஸ் அணியுடன் மோத உள்ளது.