ஃபிபாவில் இன்று மோதல்... மெக்சிகோவை பந்தாடுமா நடப்பு சாம்பியன் ஜெர்மனி!

மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் எப் பிரிவில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் மெக்சிகோவுடன் நடப்பு சாம்பியன் ஜெர்மனி மோதுகிறது.
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. எப் பிரிவில் நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி, மெக்சிகோவுடன் விளையாட உள்ளது.
----
பிரிவு எப்
ஜெர்மனி - மெக்சிகோ
போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி இரவு 8.30 மணி
----
இதுவரை உலகக் கோப்பையில் இரு அணிகளும் நான்கு முறை மோதின. அதில் ஜெர்மனி தோல்வி அடைந்ததில்லை. மூன்றில் வெற்றி, ஒன்றில் டிரா செய்துள்ளது.
கடந்த 7 உலகக் கோப்பைகளில் தனது அனைத்து முதல் ஆட்டங்களிலும் ஜெர்மனி வென்றுள்ளது.
அதே நேரத்தில் மெக்சிகோ கடந்த 5 உலகக் கோப்பை முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்ததில்லை. 4ல் வெற்றி, ஒன்றில் டிரா செய்துள்ளது.
--
முக்கிய வீரர்கள்
ஜெர்மனி - வெர்னரின் வேகத்தை தடுக்க மெக்சிகோ முயற்சிக்கும். அது தாமஸ் முல்லருக்கு சாதகமாக அமையும். 2010 உலகக் கோப்பை தங்க ஷூ வென்ற அவர், 2014 உலகக் கோப்பையில் 5 கோல்களை அடித்துள்ளார்.
மெக்சிகோ - ஜெர்மனியின் தடுப்பாட்டத்துக்கு சவால் விடுக்கக் கூடியவர் கார்லோஸ் வேலா.
---
1962ல் பிரேசில் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது. அந்த சாதனையை புரிய வேண்டும் என்ற இலக்குடன் நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்ளது.
இதுவரை பிரேசில் மட்டுமே அதிகபட்சமாக 5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்த உலகக் கோப்பையை வென்றால் அந்த சாதனையை ஜெர்மனி சமன் செய்யும்.
உலகக் கோப்பையில் 14 அல்லது அதற்கு மேற்பட்ட முறை விளையாடியுள்ள 8 அணிகளில், கோப்பையை வெல்லாத ஒரே அணி மெக்சிகோ.
தற்போதைய நிலையில் ஜெர்மனி மிகவும் வலுவான அணியாக உள்ளது. இருப்பினும் மெக்சிகோவுக்கு எதிரான ஆட்டத்தை அது சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது என்று எதிர்பார்ப்போம்.


Click it and Unblock the Notifications