கோவா : ஏடிகே மோகன் பகான் - ஹைதராபாத் எஃப்சி அணிகள் மோதும் 24வது ஐஎஸ்எல் லீக் போட்டி கோவாவில் நடைபெற உள்ளது.
இந்த ஐஎஸ்எல் சீசனில் ஏடிகே மோகன் பகான் அணி தன் முதல் தோல்வியை கடந்த போட்டியில் சந்தித்து இருந்தது.

ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி, ஏடிகே அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது. முதல் மூன்று போட்டிகளில் வென்ற ஏடிகே அணிக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்தது.
ஏடிகே அணியின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக இந்த சீசனில் ஆடி வருவது ராய் கிருஷ்ணா தான். அவர் ஒவ்வொரு போட்டியிலும் கோல் அடித்து நம்பிக்கை அளித்து வருகிறார் அவரை சார்ந்தே அந்த அணி இருப்பது போன்ற தோற்றமும் இதனால் ஏற்பட்டுள்ளது.
ஹைதராபாத் அணி கடந்த சீசனில் மிக மோசமாக ஆடி வந்தது. ஆனால், இந்த சீசனில் முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடையவில்லை. ஒரு வெற்றி, இரண்டு டிரா செய்து நல்ல நிலையில் உள்ளது அந்த அணி.
ஏடிகே மோகன் பகான் அணி வலுவான அணி என்பதால், ஹைதராபாத் அணிக்கு இது பெரிய சவால் தான். அந்த அணியில் சில வீரர்கள் காயத்தால் ஆட முடியாத நிலையில் இருப்பது பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது.
ஹைதராபாத் அணி வலுவான அணியை களமிறக்க முடியாமல் போகவும் வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் ஏடிகே அணி எளிதாக வெற்றி பெறலாம்.