கோவா : ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் ஏடிகே மோகன் பகான் - ஹைதராபாத் எஃப்சி அணிகள் இடையே ஆன லீக் போட்டி டிராவில் முடிந்தது.
இரண்டு அணிகளும் ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி 1 - 1 என டிரா ஆனது. ஹைதராபாத் அணி தொடர்ந்து தோல்வி பெறாமல் தன் பயணத்தை தொடர்ந்து வருகிறது.

ஏடிகே அணி கடந்த போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், இந்தப் போட்டியில் டிரா மட்டுமே செய்துள்ளது.
இந்தப் போட்டியில் முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் 54வது நிமிடத்தில் ஏடிகே மோகன் பகான் அணியின் மன்விர் சிங் போட்டியின் முதல் கோலை அடித்தார்.
அடுத்த 11 நிமிடங்களில், ஹைதராபாத் அணி பதிலடி கொடுத்தது. அந்த அணியின் ஜோவா விக்டர் கோல் அடித்தார். அதன் மூலம் போட்டி 1 - 1 என சமநிலையை எட்டியது. அதன் பின் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் போட்டி 1 - 1 என டிரா ஆனது.
ஏடிகே மோகன் பகான் அணிக்கு இந்த டிரா ஏமாற்றம் அளித்தாலும் 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டது அந்த அணி. ஹைதராபாத் அணி நான்கு போட்டிகளில் ஒரு தோல்வி கூட அடையாத நிலையிலும், 3 போட்டிகளை டிரா செய்து 6 புள்ளிகள் மட்டுமே பெற்று பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.