கோவா : 2020-21 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி அதிரடி முடிவை எடுத்துள்ளது.
மற்ற அணிகள் கடந்த சீசனில் ஆடிய தங்களின் சிறந்த வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்து கொண்ட நிலையில், சென்னையின் எஃப்சி அணி அதிரடியாக முடிவு எடுத்து இருவரை மட்டுமே தக்க வைத்தது.

சென்டர்-பேக்கில் ஆடும் எலி சாபியா மற்றும் மிட்பீல்டர் ரபேல் கிரிவெல்லாரோ ஆகிய இரண்டு வீரர்களை மட்டுமே அந்த அணி தக்க வைத்தது.
ஒரு அணியில் ஏழு வெளிநாட்டு வீரர்கள் வரை இருக்கலாம். அந்த வகையில் புதியதாக ஐந்து வீரர்களை அந்த அணி தேர்வு செய்தது.
இனேஸ் சிபோவிக், இஸ்மாயில் கோன்கிலேவ்ஸ், பாட்குல்லோ பாட்குல்லோவ், ஜாகுப் சில்வெஸ்டர், மெமோ மௌரா என ஐந்து புதிய வீரர்களை அந்த அணி தேர்வு செய்துள்ளது.
ஆசிய கால்பந்து கூட்டமைப்பு நாடுகளில் இருந்து ஒரு வீரரை நிச்சயம் தேர்வு செய்தே ஆக வேண்டும் என்பதால் மற்ற அணிகள் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த வீரர்களை குறி வைத்து தேர்வு செய்துள்ளன. ஆனால், சென்னையின் எஃப்சி மட்டும் மாற்றி யோசித்துள்ளது.
தஜிகிஸ்தான் நாட்டின் பாட்குல்லோ பாட்குல்லோவ்-ஐ அந்த அணி தேர்வு செய்தது. அந்த அணிக்கு கடந்த சீசனில் பாதியில் பயிற்சியாளராக வந்த ஓவன் கோயல் இந்த சீசனில் அணி தாவி ஜாம்ஷெட்பூருக்கு சென்று விட்டார். அவருக்கு பதில் தற்போது ஹங்கேரியின் சிசாபா லாஸ்லோ பயிற்சியாளராக வந்துள்ளார்.