"யாரு சாமி இந்த எம்பாப்பே" போலாந்து அணியை கதறவிட்ட பிரான்ஸ்.. கெத்தாக காலிறுதிக்கு முன்னேற்றம்!
தோஹா: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் போட்டியில் போலாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி அபார வெற்றியை பெற்று, காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பு அதிகரித்து வருகிறது. நாக் அவுட் சுற்று போட்டிகள் என்பதால், அனைத்து அணிகளும் களத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியில், போலாந்து அணி எதிர்த்து விளையாடியது. இதில் தொடக்கத்தில் பிரான்ஸ் அணி வீரர்கல் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆனால் போலாந்து அணி வீரர்கள் தடுப்பாட்டத்தில் வெளிப்படுத்திய எழுச்சி காரணமாக பிரான்ஸ் அணி வீரர்கள் தடுமாற்றத்தை சந்தித்தனர்.

பிரான்ஸ் முன்னிலை
இதன் காரணமாக போலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து அட்டாக்கில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போலாந்து அணியின் நட்சத்திர வீரர் லெவோண்டோஸ்கி-க்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனை அவர் தவறவிட்டார். இதனைத் தொடர்ந்து விழித்துக் கொண்ட பிரான்ஸ் வீரர்கள், அட்டாக் செய்ய தொடங்கினர். இதன் காரணமாக முதல் பாதியின் 44வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஜிரூட் முதல் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டம் 1-0 என்ற கோல் கணக்கில் முடிவுக்கு வந்தது.

எம்பாப்பே ஆதிக்கம்
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியின் ஆதிக்கம் அதிகரித்தது. இதன் காரணமாக நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே 74வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். இதனால் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து போலாந்து அணி வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. பின்னர் இரண்டாம் கடைசி நிமிடத்தில் மீண்டும் கிலியன் எம்பாப்பே பிரான்ஸ் அணிக்காக மூன்றாவது கோலை அடித்தார்.

போலாந்துக்கு ஆறுதல்
தொடர்ந்து இரண்டாம் பாதியின் கூடுதல் நேரத்தில் போலாந்து அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் அந்த அணியின் லெவோண்டோஸ்கி கோல் அடித்தார். போலாந்து நட்சத்திர வீரர் லெவோண்டோஸ்கியின் உலகக்கோப்பை போட்டியில் கோல் அடித்தது அந்த அணி வீரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இறுதியாக 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றது.

காலிறுதியில் பிரான்ஸ்
இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதில் இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் கிலியன் எம்பாப்பே உலகக்கோப்பையில் 9 கோல்கள் அடித்து மெஸ்ஸியின் சாதனையை சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications