Messi: பயந்து மைதானத்தை விட்டே ஓடிய மெஸ்ஸி.. பாட்டில், சேர் உடைப்பு.. கொல்கத்தா ரசிகர்கள் ஆவேசம்
கொல்கத்தா: கால்பந்து உலகமே கொண்டாடும் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்குக் கொல்கத்தாவில் காத்திருந்த அனுபவம், ஒரு கசப்பான வரலாறாக மாறியுள்ளது. மெஸ்ஸியை காணக் குவிந்த ரசிகர்கள், ஏற்பாட்டாளர்களின் சொதப்பலால் ஆத்திரமடைந்து மைதானத்திற்குள் பாட்டில்கள் மற்றும் நாற்காலிகளை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி மெஸ்ஸி பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார்.
'GOAT India Tour' பயணமாக இந்தியா வந்துள்ள மெஸ்ஸி, இன்று கொல்கத்தா சால்ட் லேக் (விவேகானந்தா யுவபாரதி) மைதானத்திற்கு வந்தார். ஆனால், அங்கு நடந்த சம்பவங்கள் முகம் சுளிக்க வைக்கும் வகையில் அமைந்தன.

மைதானத்தில் நடந்தது என்ன?
மெஸ்ஸியை ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா என்று சுமார் 4500 முதல் 12,500 வரை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மைதானத்தில் போதிய ஏற்பாடுகள் செய்யப்படாததாலும், மெஸ்ஸியைச் சரியாகப் பார்க்க முடியாததாலும் ரசிகர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றனர். மெஸ்ஸியை சுற்றி பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இருந்தனர். அதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்களால் மெஸ்ஸியை பார்க்கக் கூட முடியவில்லை.
ஆத்திரமடைந்த ரசிகர்கள், மைதானத்தில் இருந்த தடுப்புக்கட்டைகளை உடைத்துக்கொண்டு முன்னேற முயன்றனர். கையில் கிடைத்த தண்ணீர் பாட்டில்கள், செருப்புகள் மற்றும் நாற்காலிகளை மைதானத்திற்குள் வீசி எறிந்தனர். மேடையில் இருந்த அரசியல்வாதிகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை நோக்கி "பூ.. பூ.." என்று கூச்சலிட்டுத் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர்.
10 நிமிடத்தில் வெளியேறிய மெஸ்ஸி!
ரசிகர்கள் கட்டுப்பாட்டை இழந்ததால், மெஸ்ஸியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. அவர் மைதானத்தை ஒருமுறை வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்கள் பாட்டில்களை வீசத் தொடங்கியதும், பாதுகாப்பு அதிகாரிகள் அவரைச் சுற்றி வளைத்து, பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
மைதானத்திற்குள் வந்த மெஸ்ஸி, வெறும் 10 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே அங்கிருந்ததாகக் கூறப்படுகிறது. நிலைமை மோசமாவதை உணர்ந்த அவர், நிகழ்ச்சியைப் பாதியிலேயே ரத்து செய்துவிட்டுப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வெளியேறினார்.
"வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்"
சவுரவ் கங்குலி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் நடைபெறவிருந்த நிகழ்ச்சிகளும் திட்டமிட்டபடி நடக்கவில்லை.
ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா அங்கிருந்தவர்களிடம், "அவர் இனி வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார் (Aar jaabena bolche - He is not willing to go anymore)" என்று கூறியது ரசிகர்களை மேலும் கோபப்படுத்தியது. மெஸ்ஸி அங்கிருக்க விரும்பாததால், உடனடியாக ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அடுத்தது ஹைதராபாத்
வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைய வேண்டியது, மோசமான நிர்வாகத்தால் கலவர பூமியாக மாறியது கால்பந்து ரசிகர்களைத் தலைக்குனிவைச் சந்திக்க வைத்துள்ளது. கொல்கத்தா பயணத்தை முடித்துக்கொண்டு, மெஸ்ஸி இன்று மதியம் ஹைதராபாத் செல்கிறார். அங்காவது நிகழ்ச்சிகள் சரியாக நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications