கொல்கத்தா: கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி பாதியிலேயே வெளியேறியதைத் தொடர்ந்து, கொல்கத்தா சால்ட் லேக் மைதானம் ஒரு போர்க்களம் போல மாறியது. ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து நாற்காலிகளை அடித்து நொறுக்கியும், பேனர்களைக் கிழித்தெறிந்தும் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி இந்தியாவில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் கொல்கத்தாவில் அவரது சிலையை அவரே திறந்து வைக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து சால்ட் லேக் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன் மெஸ்ஸி தோன்றுவார் என கூறப்பட்டு, அதற்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து இருந்தது.

சுமார் 4500 முதல் 12500 வரை விலை கொடுத்து அந்த டிக்கெட்களை வாங்கிய ரசிகர்கள் மெஸ்ஸியை பார்க்க ஆவலுடன் இருந்தனர். ஆனால், மைதானத்தில் அவரை சரியாக பார்க்க முடியாத நிலை இருந்தது. இதை அடுத்து ரசிகர்கள் அதிருப்தி அடைந்து பாட்டில் உள்ளிட்டவற்றை வீசினர். இதை அடுத்து அசாதாரண சூழல் நிலவியது. மெஸ்ஸி உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.
பாதுகாப்பு குறைபாடு மற்றும் மோசமான ஏற்பாடுகள் காரணமாக மெஸ்ஸி 10 நிமிடங்களில் வெளியேறிய நிலையில், ஏமாற்றமடைந்த ரசிகர்கள் தங்கள் கோபத்தை மைதானத்தின் மீது காட்டினர். மெஸ்ஸி வெளியேறிய செய்தி உறுதியானதும், கேலரியில் இருந்த ரசிகர்கள் கட்டுப்பாட்டை இழந்தனர்.
தடுப்புகளைத் தாண்டி மைதானத்திற்குள் ஓடினர். கேலரியில் இருந்த நூற்றுக்கணக்கான நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பட்டன.
மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த கட்-அவுட்கள், பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் அனைத்தும் கிழித்தெறியப்பட்டன. காவல்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கிப் பொருட்கள் வீசப்பட்டன. மைதானமே சின்னாபின்னமானதைக் காட்டும் வீடியோக்கள் வெளியாகி, விளையாட்டு உலகத்தையே முகம் சுளிக்க வைத்துள்ளன.
கலவரத்திற்குக் காரணம் குறித்து அங்கிருந்த ரசிகர் ஒருவர் வேதனையுடன் கூறினார். "இது ஒரு மோசமான நிகழ்ச்சி. மெஸ்ஸி வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே இருந்தார். அவரையும் அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் மறைத்துக் கொண்டார்கள். எங்களால் அவரைப் பார்க்கவே முடியவில்லை.
ஷாருக்கான் வருவார் என்று சொன்னார்கள், அவரும் வரவில்லை. மெஸ்ஸி ஒரு பெனால்டி கிக் கூட அடிக்கவில்லை. எங்களின் பணம், நேரம், உணர்வுகள் அனைத்தும் வீணாகிவிட்டது. எங்களை ஏமாற்றிவிட்டார்கள்," என்று கொந்தளித்தார்.
இந்தக் கலவரம் மற்றும் மோசமான நிர்வாகம் குறித்துத் தகவல் அறிந்த மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். மெஸ்ஸி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மைதானத்தில் கலவரம் வெடித்த நிலையில், மெஸ்ஸி உடனடியாகப் பலத்த பாதுகாப்புடன் கொல்கத்தா விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து அவர் தனது அடுத்த பயணமாக ஹைதராபாத் கிளம்பிச் சென்றுள்ளார். கொல்கத்தாவில் கால்பந்து திருவிழாவாக நடக்க வேண்டிய நிகழ்ச்சி, இறுதியில் வன்முறையிலும், விசாரணையிலும் முடிந்துள்ளது.