ஃபிபா உலகக் கோப்பை.... நாளை நடக்கும் போட்டியில் சாலாஹ் விளையாடுகிறார்!
மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் நாளை நடக்கும் உருகுவேவுக்கு எதிரான ஆட்டத்தில் எகிப்தின் முக்கிய வீரரான மொகம்மது சாலாஹ் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் துவங்கியுள்ளன. இதில் ஏ பிரிவில் ரஷ்யா, சவுதி அரேபியா, உருகுவே அணிகளுடன் எகிப்து இடம்பெற்றுள்ளது.

1934க்குப் பிறகு 1990ல் நடந்த உலகக் கோப்பையில் எகிப்து பங்கேற்றது. ஆனால், இதுவரை பிரிவு சுற்றைத் தாண்டியதில்லை. தற்போது சாலாஹை நம்பி, அவருடைய உதவியால் எகிப்து அணி உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளது.
தற்போதுள்ள புகழ்பெற்ற வீரர்களில் ஒருவரான சாலாஹ் லிவர்பூல் கிளப் அணிக்காக விளையாடுகிறார். கடந்த மாதம் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியின் பைனலில் ரியல் மாட்ரிட் அணியுடன் லிவர்பூல் மோதியது. அந்த ஆட்டத்தின்போது தோள்பட்டையில் சாலாஹுக்கு காயம் ஏற்பட்டது. கடந்த சீசனில் 44 கோல்களை அடித்துள்ள சாலாஹ் உலகக் கோப்பை போட்டிக்கான எகிப்து அணியில் இடம்பெற்றுள்ளார்.
ஆனால், உருகுவேவுக்கு எதிராக நாளை நடக்கும் ஆட்டத்தில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் இருந்தது. இந்த நிலையில், முழு உடல் திறனுடன் உள்ளதால் நாளை நடக்கும் ஆட்டத்தில் சாலாஹ் விளையாடுவார் என்று எகிப்து கோச் ஹெக்டார் கூபர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications