அடக் கடவுளே.... இப்படியெல்லாமா சோதனை வரும்.... புலம்பும் செனகல் வீரர்கள்!
மாஸ்கோ: ஃபிபா உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக ஃபேர் பிளே எனப்படும் சிறந்த முறையில் விளையாட்டு விதிகளை மதிக்கும் அணிக்கான புள்ளிகள் அடிப்படையில், நாக் அவுட் வாய்ப்பை செனகல் இழந்தது. ஆனால், அதே அடிப்படையில் ஜப்பான் முன்னேறியது.
21-வது ஃபிபா உலகக் கோப்பை போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வந்தன. நேற்று இரவு நடந்த கடைசி லீக் ஆட்டங்களில் எச் பிரிவில் ஜப்பான் - போலந்து, செனகல் - கொலம்பியா மோதின.

இந்த ஆட்டங்களின் முடிவில்தான் யார் நாக் அவுட் முன்னேறுவர் என்பது தெரியவரும் நிலையில், பரபரப்பாக நடந்தது. ஏற்கெனவே 4 புள்ளிகளுடன் இருந்த செனகல், 3 புள்ளிகளுடன் இருந்த கொலம்பியாவை சந்தித்தது. அதே நேரத்தில் 4 புள்ளிகளுடன் இருந்த ஜப்பான், புள்ளி ஏதும் எடுக்காத போலந்துடன் விளையாடியது.
இந்த ஆட்டங்களில் போலந்து 1-0 என ஜப்பானை வென்றது. கொலம்பியா 1-0 என செனகலை வென்றது. இதன் மூலம் 6 புள்ளிகள் பெற்று கொலம்பியா நாக் அவுட் முன்னேறியது. தலா 4 புள்ளிகளுடன் உள்ள ஜப்பான், செனகலில் யார் முன்னேறுவர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கோல் கணக்கிலும் இரு அணிகள் சமநிலையில் இருந்தன.
அதனால் ஃபேர் பிளே அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது. அதில் செனகல் 6 முறை மஞ்சள் அட்டை பெற்றிருந்தது. 4 மஞ்சள் அட்டை மட்டுமே பெற்றதால் ஜப்பான் நாக் அவுட் முன்னேறியது.
ஃபிபா உலகக் கோப்பை வரலாற்றில் ஃபேர் பிளே அடிப்படையில் முடிவு எடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். ஜப்பானுக்கு அது சாதகமாக இருந்தது. ஆனால், இப்படியெல்லாமா சோதனை வரும் என செனகல் வீரர்கள் புலம்புகின்றனர்.


Click it and Unblock the Notifications