கால்பந்து உலகக்கோப்பை.. 88வது நிமிட கோல்.. பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின்
அர்லிங்டன்: 2026 கால்பந்து உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தனது வரலாற்றில் இரண்டாவது முறையாக அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது ஸ்பெயின் அணி. 88வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரராக களம் இறங்கிய மைக்கேல் மெரினோ அடித்த அதிரடி கோல் ஸ்பெயின் அணிக்கு இந்த வெற்றியைத் தேடித்தந்தது.
இந்தப் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் சமபலத்துடன் மோதின. ஸ்பெயின் அணியின் 18 வயது இளம் நட்சத்திரம் லமின் யமால் தனது சிறப்பான ஆட்டத்தால் பெல்ஜியம் அணிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தார். முதல் கோலை ஸ்பெயின் அணியின் ஃபேபியன் ரூயிஸ் அடித்து அணிக்கு முன்னிலை தேடித்தந்தார்.

பெல்ஜியம் அணியின் கேப்டனும் நட்சத்திர கோல்கீப்பருமான திபாத் கோர்டோயிஸ் பல அபாரமான தடுப்புகளை மேற்கொண்டு ஸ்பெயினின் கோல் முயற்சிகளை முறியடித்தார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் 21 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது கோல்கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். ஆனால், போட்டியின் இரண்டாவது பாதியில் அவருக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
அவருக்குப் பதிலாக களம் இறங்கிய இளம் கோல்கீப்பர் சென்னி லேமன்ஸ் செய்த சிறிய தவறால் ஆட்டம் ஸ்பெயின் பக்கம் திரும்பியது. போட்டியின் 88வது நிமிடத்தில் பாவ் குபார்சி அடித்த பந்தை லேமன்ஸ் சரியாக தடுக்கத் தவறினார். அப்போது பாய்ந்து வந்த ஸ்பெயின் வீரர் மைக்கேல் மெரினோ, பந்தை லாவகமாக கோல் போஸ்ட்டிற்குள் தள்ளி ஸ்பெயினின் வெற்றியை உறுதி செய்தார்.
FIFA உலகக்கோப்பை காலிறுதிக்குக்கு தகுதி பெற்ற 8 அணிகள் எவை? முழு அட்டவணை மற்றும் நேரம்
இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணி தனது தொடர்ந்து 36 போட்டிகளாக தோல்வி அடையாத அணியாக வலம் வருகிறது. கடந்த மார்ச் 2023 முதல் ஸ்பெயின் அணி தான் ஆடிய எந்தப் போட்டியிலும் தோல்வி அடையவில்லை. 2010ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற ஸ்பெயின் அணி, அதன் பின் அரையிறுதிக்கு தகுதி பெறுவது இதுவே முதல்முறையாகும். அடுத்ததாக செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள அரை இறுதிப் போட்டியில் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பேயின் பிரான்ஸ் அணியை ஸ்பெயின் எதிர்கொள்ள உள்ளது.


Click it and Unblock the Notifications