கால்பந்தை தத்தெடுக்கும் பாரதி டெலிகாம்-ரூ100 கோடி முதலீடு செய்கிறது
டெல்லி: இந்தியாவில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்த பாரதி டெலிகாம் நிறுவனம், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துடன் இணைந்து ரூ.100 கோடியை செலவிட முடிவு செய்துள்ளது.
தேசிய கால்பந்து மேம்பாட்டு முகாம் மூலம் உலகத்தரம் வாய்ந்த இந்திய வீரர்களை வெளிக் கொண்டு வர அகில இந்திய கால்பந்து சம்மேளனம், இந்தியாவின் பிரபல தனியார் நிறுவனமான பாரதி டெலிகாம் உடன் கை கோர்த்துள்ளது.
இதுகுறித்து பாரதி டெலிகாம் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் மிட்டல் கூறுகையில், தேசிய கால்பந்து முகாமுக்கு ரூ.100 கோடி செலவிட திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் வீரர்களை தயார் செய்ய முடியும்.
இந்த பயிற்சி முகாம் மூலம் தயார் செய்யப்படும் கால்பந்து வீரர்கள் மூலம் இந்தியாவும் கால்பந்து விளையாட்டில் உலக அளவில் பிரபலமாகும்.
தற்போது இந்தியா கால்பந்து விளையாட்டில் உலகஅளவில் 145வது இடத்தில் உள்ளது. இந்த பயிற்சி முகாமில் தயார் செய்யப்படும் வீரர்கள் மூலம் இந்தியா உயர்ந்த இடத்துக்கு வரும். கால்பந்து மேம்பாட்டிற்காக மேலும் முதலீடு செய்ய இன்னும் திட்டமிடவில்லை.
கால்பந்து விளையாட்டில் இந்தியா சிறப்பான ஒரு இடத்தை அடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். பார்தி என்டர்பிரைசஸ், அகில இந்திய கால்பந்து சம்மேளனமும் சேர்ந்து இந்திய கால்பந்து அணியை தயார் செய்வது ஆசியாவுக்கும், உலகத்துக்கும் பெருமையாகும் என்றார் அவர்.
மத்திய அமைச்சரும், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவருமான பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி கூறுகையில், இந்தியாவில் கால்பந்துக்கு தனி வரலாறு உண்டு. புதிதாக அமைக்கப்படும் கால்பந்து அகாடமி இளம் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை மேம்படுத்தும்.
உலக அளவிலான போட்டிகளுக்கேற்ப அவர்களை தயார்படுத்தும். பார்தி போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள் இந்த முயற்சிக்கு கை கொடுப்பது பாராட்டுக்குரியது.
உலக அளவிலான கால்பந்து ஆட்டத்தில், இந்தியாவை சூப்பர் பவர் ஆக்குவதற்காக இரு அமைப்புகளும் இணைந்து பாடுபடும். இந்த முயற்சியில் மேலும் பல நிறுவனங்களும் கை கோர்க்க முன்வர வேண்டும் என்றார்.
இந்தத் திட்டத்தின் கீழ் பார்தி - அகில இந்திய கால்பந்து சம்மேளன அகாடமி என்ற பெயரில் புதிய அமைப்பு தொடங்கப்படும். ஐரோப்பிய நாடுகளில் உள்ளதைப் போன்ற தரமான கால்பந்து கிளப்களை இது உருவாக்கும். இதில் சேருவோருக்கு தங்குமிடம், கல்வி வசதிகளும் செய்து தரப்படும்.
பல்வேறு வயதுடைய இளம் வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உலகத் தரமான பயிற்சி அளிக்கப்படும். உலக அளவிலான வீர்ரகள், நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.
கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் இந்தியாவில், வீழ்ந்து கிடக்கும் கால்பந்து விளையாட்டுக்காக பாரதி டெலிகாம் நிறுவனம் ரூ. 100 கோடியை செலவிட முன்வந்துள்ளது பாராட்டுக்குரியதாகும்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:35 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications